பெங்களூரு:''ஸ்மார்ட் சிட்டிப்பணிகளை, குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிக்காமல் இருந்தால், ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதிக்கப்படும்,'' என, பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தா எச்சரித்தார்.பெங்களூரில் நடந்து வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளை, மாநகராட்சி நிர்வாக அதிகாரி, நேற்று ஆய்வு செய்தார்.நகரின், டிக்கன்சன் சாலையில், நிதானமாக நடந்து வரும், ஸ்மார்ட் சிட்டி திட்ட சாலை பணிகளை ஆய்வு செய்த அவர், விரைவில் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, ஹலசூரு சாலையின், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி; காமராஜர் சாலையில் நடைபாதை பணி; கமர்ஷியல் தெருவில் தார் போடும் பணி; ராஜ்பவன் சாலையில் நடைபாதை பணியையும் ஆய்வு செய்தார்.அதன் பின், அவர் கூறியதாவது:பெங்களூரு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், நகரின், 36 சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. இப்பணிகள் தாமதமாக நடப்பதாக, தொடர்ந்து புகார் வந்ததால் ஆய்வு செய்யப்பட்டது.பணிகளை விரைவுபடுத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இம்மாத இறுதிக்குள், ராஜ்பவன் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, ஜவஹர்லால் நேரு கோளரங்கம் சாலை, ஹெயிஸ் சாலை ஆகிய நான்கு சாலை பணிகள் முடிக்கப்படும்.ஜனவரியில், மேலும், 10 சாலை பணிகள் முடித்து, வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம். ஒப்பந்ததாரர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும். கால தாமதம் செய்தால், நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE