பெங்களூரு: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கர்நாடகா கரும்பு விவசாயிகள், பெங்களூரில், ஒன்பதாவது நாளாக, அரை நிர்வாணத்துடன், நேற்று போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக, கர்நாடகா கரும்பு விவசாய சங்கத்தினர், பெங்களூரு மவுரியா சதுக்கத்தில், கடந்த, ஒன்பது நாட்களாக, தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.ஒன்பதாவது நாளான நேற்று, கைகளில் குச்சிகளை பிடித்து கொண்டு, அரை நிர்வாணத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபுர் சாந்தகுமார் கூறியதாவது:டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.விவசாயிகளை தெருவில் அமரவைத்து விட்டு, விவசாய தினம் கொண்டாடுவது சரியில்லை. வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடத்தினாலும், அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாய கூலி தொழிலாளர்கள், கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.'கிஷான் சன்மான்' திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில், மானியம் செலுத்தி, எங்களை கண்களை மூடி மறைக்க பார்க்கிறார்.உண்மையிலேயே, பிரதமர் நரேந்திர மோடிக்கு, விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், நேரில் வந்து ஆலோசிக்கட்டும்.கரும்பு விவசாயிகளுக்கு, 3,500 கோடி ரூபாய் வழங்காமல், மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும். டில்லி போராட்டத்தில் பங்கேற்றோரில்ல், 30 பேர் இறந்துள்ளனர். அரசுக்கு அக்கறையே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE