பெங்களூரு: முககவசம் அணியாத பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு, 250 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம், பெங்களூரு சேஷாத்திரிபுரம் சாலையில் நடந்தது. தன்னிடம் அபராதம் வசூலித்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகரே, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான எம்.பி.குமாரசாமி, டாக்சியில், பெங்களூரு சேஷாத்திரிபுரத்திலிருந்து விதான் சவுதா அருகிலுள்ள, எம்.எல்.ஏ., பவனுக்கு, நேற்று பகல், 12:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.சேஷாத்திரிபுரம் காவல் நிலையம் அருகில், முக கவசம் அணியாதோரை கண்காணித்து, போலீசார் அபராதம் விதித்து கொண்டிருந்தனர்.
இதேவேளையில், எம்.எல்.ஏ., பயணித்த கார், அங்கு வந்த போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. அப்போது, அவர், முக கவசம் அணியாததை பார்த்த போலீசார், காரின் கண்ணாடியை இறக்க வைத்து, 'முக கவசம் அணியவில்லை' என கூறி, 250 ரூபாய் அபராதம் விதித்தனர்.எம்.எல்.ஏ., என்பதை கூற தயங்கிய அவர், வேறு வழியின்றி, 250 ரூபாய் அபராதம் செலுத்தினார்.பின், எம்.எல்.ஏ.,க்கள் பவன் வந்த அவர், தான் பயணித்த காரின் கண்ணாடியை இறக்க வைத்து, அபராதம் விதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதினார்.இத்துடன், தான், 250 ரூபாய் அபராதம் செலுத்திய ரசீதையும் இணைத்திருந்தார்.
இது குறித்து எம்.எல்.ஏ., கூறுகையில், ''நான் பயணித்த காரின் கண்ணாடியை, வலுக்கட்டாயமாக இறக்க வைத்தனர். சங்கோஜத்துடன் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக அபராதம் செலுத்தினேன். தேவையின்றி அபராதம் விதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE