கரூர்: சொந்த கட்சி கொண்டு வந்த திட்டத்தை, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எதிர்ப்பதால், அக்கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
கடந்த, தி.மு.க., ஆட்சியில், 'கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட், தோரணக்கல் பட்டியில் அமைக்க வேண்டும்' என, 2009ல், கரூர், தாந்தோன்றிமலை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். தொடர்ந்த, 2103ல், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, கருப்பம்பாளையத்தில் தனியார் தானமாக வழங்கிய இடத்தில் பஸ் ஸ்டாண்ட் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, அப்போதைய, அ.தி.மு.க., கவுன்சிலர் ஏகாம்பரம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவில்லை. பின்னர், 2018 ஜன.,யில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில், இரண்டு ஆண்டுகளில் பஸ் ஸ்டாண்ட் பணிகள் தொடங்கப்படும் என, நகராட்சி சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், இடத்தை மாற்றி தோரணக்கல்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க., திட்டத்தை, செந்தில் பாலாஜி எதிர்ப்பது, அக்கட்சி நிர்வாகியிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: வழக்கம் போல, தி.மு.க., திட்டத்தை புறக்கணித்து, அ.தி.மு.க., ஆட்சியில் புதிய இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முயற்சி செய்தனர். என்ன நடந்தது தெரியவில்லை, செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது திட்டத்தை நிறைவேற்றவில்லை. தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில், தோரணக்கல்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பூர்வாங்க பணி நடந்து வருகிறது. இப்போது, செந்தில்பாலஜி, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வாகவும், மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்தும், தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்து பேசி வருகிறார். இது தொடர்பாக பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்போதைய, தி.மு.க., தலைவரும், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் ஸ்டாலின் இருந்த போது, புதிய பஸ் ஸ்டாண்ட் தொடங்க முயற்சி செய்த இடத்தை, செந்தில்பாலாஜி வெளிப்படையாக எதிர்த்து பேசுகிறார். இதை வெளியில் சொல்ல முடியாமல் மாவட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE