திருவண்ணாமலை: ''ரஜினி, கமல், தேர்தலில் போட்டியிடுவதால், தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பில்லை,'' என, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஈ.வே.ரா., நினைவுநாளையொட்டி, மா.கம்யூ., சார்பில், திருவண்ணாமலையில் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: சிறுபான்மை மக்களை கேள்விக்குறி ஆக்கும் முத்தலாக் சட்டம், குடியுரிமை சட்டத்துக்கு, லோக்சபாவில் ஆதரித்துவிட்டு, சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் கேடயமாக துணை நிற்போம் என, கூச்சமில்லாமல் முதல்வர் பேசி வருகிறார். ரஜினி, கமல் தேர்தலில் நிற்பதால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, எந்தவித பாதிப்பும் இல்லை. பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்து, கடந்த லோக்சபா தேர்தலில், படுதோல்வியை சந்தித்தது. அதுபோலவே, வரும் சட்டசபை தேர்தலிலும் நடக்கும். அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியை யாராலும் காப்பாற்ற முடியாது. எட்டு வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது, பணியை தொடங்குவோம் எனக்கூறி வருகின்றனர். பணி தொடங்கிய மறுநாளே, நாங்கள் கடுமையாக எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE