கோல்கட்டா: ‛மேற்குவங்கத்தில் தாமரையை மலரச் செய்யும் வரை நான் தூங்க மாட்டேன்,' என மம்தாவின் திரிணமுல் காங்., கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி சபதம் ஏற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். அரசில் முக்கிய அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். பின் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பிய அவர், கோல்கட்டாவில் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். இன்னும் சில மாதங்களில் மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அரசியல் கட்சியினர் இப்போதிருந்தே தீவிர பிரசாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் கொந்தாய் என்ற இடத்தில் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரியும், மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ்-ம் பங்கேற்றனர்.

அப்போது சுவேந்து அதிகாரி பேசியதாவது: தற்போது நானும், திலீப் கோஷும் வந்துள்ளோம். இங்கே, திரிணமுல் காங்கிரஸ்காரர்கள் யாராவது இருந்தால் ஓடி விடுங்கள். இது சாதாரண புயல் தான். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சுனாமி அலை எழும். மே.வங்க மாநிலத்தில் தாமரையை மலரச் செய்யும் வரை நான் தூங்க மாட்டேன். இந்த மாநில மக்கள் திரிணமுல் காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறிய தயாராகி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE