கட்சி உருப்படுமா?
'ஏற்கனவே இருக்கும் கோஷ்டிகள் போதாதா...புது கோஷ்டி வேறா' என, காங்கிரஸ் கட்சியின் உண்மையான விசுவாசிகள் வேதனைப்படுகின்றனர். உடல்நிலை காரணமாக, சோனியா, காங்கிரஸ் தலைவர் பதவியில் முழுமையாக பணியாற்ற முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி, கட்சிக்குள் தீவிரமாக நடந்து வருகிறது. 'சோனியாவுக்குப் பின், ராகுல் தான் தலைவராக வேண்டும்' என, ஒரு கோஷ்டியினர் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ராகுல், எந்த பதிலும் கூறாமல், மவுனம் சாதிப்பதால், அவர்கள் விரக்தியில் உள்ளனர். மற்றொரு பக்கம், காங்கிரசில், சோனியாவையும், ராகுலையும் பிடிக்காத, மூத்த தலைவர்கள் அடங்கிய ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை முன்னிலைப் படுத்துகிறது.
பல ஆண்டுகளாக, கட்சியில் எந்த முக்கியத்துவமும் கிடைக்காமல் உள்ள இவர்கள், 'சரத் பவார், காங்கிரஸ் தலைவராகி விட்டால், நமக்கு பெரிய பதவி கிடைக்கும்' என்ற கனவுடன் உள்ளனர். இந்த இரண்டு கோஷ்டிகளுமே, இப்போது திரைமறைவில், பரஸ்பரம் குழி பறிக்கும் வேலையைத் துவங்கி விட்டன.சரத் பவார் தரப்போ, 'காங்கிரசில் சேருவதா; அதற்கு வாய்ப்பே இல்லை' என கூறினாலும், 'என்ன நடக்குது பார்க்கலாம்' என, வேடிக்கை பார்க்கிறது. காங்கிரசுக்கு விசுவாசமான தொண்டர்கள், 'ஏற்கனவே, தோல்வி மீது தோல்வி வந்து சேருகிறது. இந்த லட்சணத்தில் கோஷ்டி பூசல், அவசியமா; கட்சி உருப்பட்டு விடும்' என, புலம்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE