தமிழக பா.ஜ., தலைவர் முருகன்: தி.மு.க., பொய் பிரசாரம் செய்ததால், விவசாயிகள், மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் நடத்திய, 'பந்த்' தோல்வி அடைந்தது. எஸ்றா சற்குணம் போன்ற மதத் தலைவர்கள், தி.மு.க., கூட்டத்தில், பிரதமரை தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்; ஹிந்து மதம் குறித்தும் விமர்சித்துள்ளனர். அவரும், ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்; எஸ்றா சற்குணத்தை போலீசார் கைது செய்ய வேண்டும்.
'டவுட்' தனபாலு: தி.மு.க., கூட்டணிகள், பந்த் நடத்தியதாக கூறினாலும், அது குறித்து மக்களுக்கே தெரியாத அளவில் தான் நடந்துள்ளது. எனவே, இனிமேலும் அவர்கள், பந்த் நடத்த, அழைப்பு விடுப்பது, 'டவுட்' தான். அதுபோல, மோடியையும், ஹிந்து மதத்தையும் துாற்றுவதையே வாடிக்கையாக கொண்டவர்களை கைது செய்வதால் மட்டும் திருந்தி விடுவரா என்ன என்ற, 'டவுட்'டும் வருகிறது. 'திருடராய் பார்த்து திருந்தா விட்டால்...' என்ற எம்.ஜி.ஆர்., பாட்டு தான் நினைவுக்கு வருகிறது!
மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்: 'பாலியல் வன்கொடுமைக்கு காரணம், பெண்கள் துணி உடுத்தும் விதம் தான்; இதனால் தான், ஆண்களின் மனம் கெட்டுப் போகிறது' என்கின்றனர். சாமி கூடத் தான் துணி குறைவாக உடுத்தியிருக்கிறது. சில சாமிகள் ஆடையே அணிவதில்லை. அங்கே அவர்களுக்கு தோன்றாதது, என் அக்காவையும், தங்கையையும் பார்க்கும் போது, ஏன் தோன்றுகிறது? வேலை செய்யாமல் சம்பளம் என்பது போல், காதல் இல்லாமல், 'அது' வேண்டும் என, நினைக்கின்றனர்.
'டவுட்' தனபாலு: சாமியை கும்பிடும் சமுதாயத்தில் பிறந்து விட்டு, சாமி கும்பிடுவதை இழிவாக பேசினால் தான், கமலை, அறிவுஜீவி என மக்கள் கருதுவர் என்ற நினைப்பு அவருக்கு இருக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை. எனினும் அவர், சில உதவாக்கரைகள் போல, ஹிந்து மதத்தை மட்டுமே சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்; பிற மதங்களை கண்டுகொள்வதே இல்லை!
அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி: அ.தி.மு.க.,வை தந்த, எம்.ஜி.ஆர்., புகழை எந்நாளும் காப்போம். அவரது நினைவுகளை இதயத்தில் வைத்து, கட்சி பணியாற்றுவோம். எம்.ஜி.ஆர்., வழி நடப்போம். கட்சியை இமயம் போல் உயர்த்திடுவோம். உண்மையான ஜனநாயகம் காப்போம். அவர் காட்டிய புரட்சி வழியை தொடர்வோம். மக்களுக்கு தொண்டாற்றுவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு, மக்கள் மகுடம் சூட்டினர். அந்த புகழ் மகுடத்தை, எதிரிகள் எவரும் தட்டி பறிக்க விட மாட்டோம்.
'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், எம்.ஜி.ஆர்., நினைவை இதயத்தில் வைத்துள்ளனரா; அவரின் புரட்சி வழி நடக்கின்றனரா; மக்களுக்கு தொண்டாற்றுகின்றனரா என்பது, மிகப் பெரிய, 'டவுட்' தான். எனினும், எம்.ஜி.ஆர்., ஜெ., என்றால் உருகித் தான் போகின்றனர். அதுபோல, தி.மு.க.,வினர் கருணாநிதி மீது பாசத்தையும், நேசத்தையும் காட்டுவதில்லையே ஏன் என்ற, 'டவுட்'டும் வருதே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE