அரசு கெஞ்சக் கூடாது!
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில், ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சலும், சாதுார்யமும் ஆண்களுக்கு இல்லை என்பது, பல சந்தர்ப்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளதுரயில்வே ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி காட்டினார், முன்னாள் பிரதமர் இந்திரா.'போராட்டம், வேலை நிறுத்தம்' என மிரட்டிய போது, தமிழக அரசு ஊழியர்கள், ஒரு லட்சம் பேரை, 'டிஸ்மிஸ்' செய்து பாடம் புகட்டினார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த கோல்டா மேயர், அரபு நாடுகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தார். பிரிட்டன் பிரதமர் மார்க்கரெட் தாட்சரை, 'இரும்பு பெண்மணி' என்றழைத்தனர்.பாகிஸ்தானோடு போரிட்டு, வங்காள தேசத்திற்கு விடுதலை வாங்கித் தந்தார், இந்திரா. பஞ்சாப்பில், தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கினார்.கம்யூனிஸ்ட்கள், இங்கு தான் அற்ப விஷயத்துக்கு எல்லாம் போராட்டம் நடத்துகின்றனர். ரஷ்யா, சீனா போன்ற கம்யூ., நாடுகளில் எல்லாம், போராட்டம் நடத்தினால், உடனடியாக
ஒடுக்கப்படும்.இன்று டில்லியில், 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடிக்கிறது. விவசாயிகளை கொத்தடிமைகளாக நடத்தி, கமிஷன் என்ற பெயரில் சுரண்டும் புரோக்கர்கள் தான், வருமானம் போய்விடுமே என்ற பயத்தில், போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், மத்திய அரசு அதிகாரிகளுடன், முறையாக பேச்சு நடத்துவதில்லை. சுயநலவாதிகள் நடத்தும் அந்த போராட்டத்தை ஒடுக்க முடியாமல், மத்திய அரசு தவிப்பது, வேதனை தருகிறது.
'போராட்டம், வேலை நிறுத்தம் செய்வதை, அடிப்படை உரிமையாக எடுத்துக் கொள்ள முடியாது' எனக் கூறிய நீதிமன்றம், விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க தயங்குவது ஏன் என, தெரியவில்லை.ஜனநாயக நாட்டில் பிரதமர், முதல்வர் எல்லாம், சில நேரங்களில் சர்வாதிகாரியாக மாறத் தான் வேண்டியதிருக்கும்.
'மயிலே மயிலே இறகு போடு...' என்ற கெஞ்சல், அனைத்திற்கும் உதவாது என்பதை, மத்திய அரசு புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாமும்பின்பற்றலாமே!
ச.கண்ணன், வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மஹாராஷ்டிரா மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு விதித்துள்ள உடை கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது.'உடை விஷயத்தில், அரசு ஊழியர்கள் பற்றிய பிம்பம், மக்கள் மத்தியில் மோசமாக உள்ளது' என, மஹா., அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, அரசு ஊழியர்கள் பணியின்போது, 'ஜீன்ஸ், டி - -ஷர்ட்' அணிய கூடாது; கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் முத்தாய்ப்பான விஷயம் என்னவென்றால், வெள்ளிக்கிழமை தோறும், கதர் ஆடை அணிய வேண்டும் என்பது தான். இதனால், நெசவாளரின் வாழ்வாதாரம் மேம்படும்.உடையில் கண்ணியம் இருக்கும்போது, அரசு ஊழியர் மீதான மதிப்பு உயர்ந்து நிற்கும். அதே நேரம், நெசவாளரின் வாழ்க்கையும் முன்னேறும்.நம் தமிழகத்திலும், இந்த நடைமுறையை பின்பற்றலாமே.
அனைவரும் ஓட்டு போடணும்!
சொ.முத்துக்குமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தேர்தலில் ஓட்டளிப்போர் எண்ணிக்கையை அதிகரிப்பது தான், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும்.
எனவே, கீழ்கண்ட வழிமுறையை, தேர்தல் ஆணையம் பின்பற்றலாம்...
* முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் வாக்குச்சாவடிகள் அமைக்கலாம்
* தபால் ஓட்டு போல இணையம் வழியே, ஓட்டு போடும் முறையை அறிமுகப்படுத்தலாம்
* மின்சாரம், குடிநீர், ரேஷன் கார்டு உட்பட அனைத்து அரசு நல திட்டங்களையும் பெற, தேர்தலில் ஓட்டு அளித்ததற்கான ஒப்புகை சீட்டை,
கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என, உத்தரவிட வேண்டும்
* வெளியூரில் பணிபுரிவோர், தேர்தல் நாள் அன்று சொந்த ஊருக்கு சென்று வருவதற்காக, குறைந்தப்பட்சம் மூன்று நாட்கள், பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும்
* ஓட்டு அளிப்பது என்பது உரிமை மட்டுமல்ல; கடமையும் கூட. எனவே, ஓட்டு அளிக்காதோருக்கு, அபராதம் விதிக்கும் சட்டத்தையும் உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறையை பின்பற்றினால், தேர்தலில் ஓட்டு அளிப்போரின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தலாம். அதனால் ஜனநாயகம் செழிக்கும்.
தே.மு.தி.க.,'உதார்' விடக்கூடாது!
என்.சேகு மகதுாம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: விஜயகாந்த் மனைவி பிரேமலதா மேற்பார்வையில், அவரது தம்பி சுதீஷ் மேலாளராக இருந்து, தே.மு.தி.க., நடத்தப்பட்டு வருகிறது.முறைப்படி, வளர்ச்சிப் பாதையில் தான், தே.மு.தி.க., துவங்கியது; ஆனால், எப்படி அழியக் கூடாதோ, அந்த வழியில் பயணித்து வருகிறது.தனித்துப் போட்டியிட்ட போது, தே.மு.தி.க.,வின் பலம், அனைவருக்கும் தெரிந்தது. இதனால், 2011 தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த ஜெயலலிதா, தே.மு.தி.க.,வை பயன்படுத்திக் கொண்டார்; வேலை முடிந்ததும், தே.மு.தி.க.,வை கழற்றி
விட்டார்.விஜயகாந்திற்கு, தற்போது உடல்நலன் சரியில்லை. அதனால், அவரின் மனைவி பிரேமலதாவின் கட்டுப்பாட்டில், தே.மு.தி.க., உள்ளது.பிரேமலதா பழைய நினைப்பில், '41 'சீட்' தரும் கட்சியுடன் தான் கூட்டணி' எனக் கூறியுள்ளார்.இரு திராவிடக் கட்சிகளும், தே.மு.தி.க.,வின் இன்றைய நிலைக்கு, 10 'சீட்'க்கு மேல் தர வாய்ப்பில்லை.தனித்துப் போட்டியிட்டால், கமல் கட்சியான, மக்கள் நீதி மையத்தை விட குறைவான ஓட்டுக்களே கிடைக்கும்.எனவே, எத்தனை சீட் கொடுத்தாலும் பரவாயில்லை என, ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்பது தான், அக்கட்சிக்கு உயிர் கொடுக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE