முதல்வர் ஊரில் முட்டி கொள்ளும் போலீஸ் அதிகாரிகள்!
''கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்டத்தை ரெண்டா பிரிக்க போறாவ வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அண்ணாச்சி.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ராமநாதபுரம் மாவட்ட, அ.தி.மு.க., செயலர் முனியசாமிக்கும், 'மாஜி' அமைச்சர் மணிகண்டனுக்கும் ஏழாம் பொருத்தமாவே இருக்கு...
''இவங்க அக்கப்போரால, மாவட்டத்துல இருக்கிற நாலு தொகுதிகள்ல, அ.ம.மு.க.,வுக்கு ஓட்டுகள் போயிடும்னு, அ.தி.மு.க., தரப்புல நினைக்காவ வே...
''அதனால, மாவட்டத்தை ரெண்டாக பிரிச்சு, ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளுக்கு, மணிகண்டனையும், பரமக்குடி, முதுகுளத்துார் தொகுதிகளை முனியசாமிக்கும் பிரிச்சு குடுத்துரலாம்னு, கட்சி மேலிடம் திட்டமிட்டிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''பேருக்கு வந்து உட்கார்ந்துட்டு போயிட்டாங்க பா...'' என, வேறு விஷயத்திற்கு மாறினார், அன்வர்பாய்.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''டில்லியில போராட்டம் நடத்திட்டு இருக்கிற விவசாயிகளுக்கு ஆதரவா, சமீபத்துல, சென்னை வள்ளுவர் கோட்டத்துல, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்புல, உண்ணாவிரதப் போராட்டம் நடந்துச்சே பா...
''கொரோனா நேரத்துல, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துனதால, கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில இருந்திருக்காங்க...
''அதனால, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பலரும், உண்ணாவிரதம் நடந்த இடத்துக்கு வந்து, அங்கிருந்த சேர்கள்ல அமர்ந்து, படம் எடுத்து, சமூக வலைதளங்கள்ல போட்டுட்டு, நழுவிட்டாங்க...
''இன்னும் சாமர்த்தியமான சில நிர்வாகிகள், சாயந்தரம் உண்ணாவிரதம் முடியுறப்ப வந்து, தலையை காட்டியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''முதல்வர் குடும்பத்தால பதவிக்கு வந்தவரை கட்டுப்படுத்த முடியாம, தவிக்கறா ஓய்...'' என, கடைசித் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.
''எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனரா, செந்தில், சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனரா, சந்திரசேகரன் இருக்கா... முதல்வர் சேலத்துக்கு வர்றச்சே, விழா மேடை பாதுகாப்பு பொறுப்பை சந்திரசேகரனுக்கும், போக்குவரத்து பாதுகாப்பை செந்திலுக்கும், கமிஷனர் பிரிச்சு குடுத்திருக்கார் ஓய்...
''சமீபத்துல சேலம் வந்த முதல்வர், தனியார் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு போயிருந்தார்... அப்ப, போலீஸ் மைக்குல, சந்திரசேகரன், போக்குவரத்து சம்பந்தமா உத்தரவு போட்டிருக்கார்...
''அதிர்ச்சியான செந்தில், கட்டுப்பாட்டு அறைக்கு பேசி, 'கமிஷனரை தவிர, வேற யாரையும் மைக்குல பேச அனுமதிக்க கூடாது'ன்னு சொல்லியிருக்கார் ஓய்... இது, முதல் முறை இல்லை...
''முதல்வர் சேலம் வர்றச்சே எல்லாம், இரண்டு துணை கமிஷனர்கள் பிறப்பிக்கிற உத்தரவுகள்ல, எதை, 'பாலோ' பண்றதுன்னு தெரியாம, போலீசார் திணறிண்டு இருக்கா...
''அதே நேரம், முதல்வரின் குடும்பத்தினர் பரிந்துரையில, சந்திரசேகரன் பதவிக்கு வந்திருக்கிறதால, கமிஷனர் செந்தில்குமாரும் இதை கண்டுக்கலை ஓய்...'' என்றார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் எழுந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE