பூ விற்ற நான் இப்போது வழக்கறிஞர்!
பள்ளியில் படிக்கும் போது, குடும்ப வறுமையை போக்க பூ விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி, தன் கனவுத் தொழிலான வழக்கறிஞர் ஆகியுள்ளது பற்றி விஜயலட்சுமி: பூர்வீகம், சென்னை அருகே உள்ள திருவள்ளூர். பெற்றோர் படிக்காதவர்கள்.சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழ்மையான குடும்பம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால், வீட்டு வாசலில் அம்மா பூ வியாபாரம் செய்தாங்க.
பள்ளி நேரம் போக, மீதி நேரங்களில் நான், ரயில் நிலைய வாசலிலும், வீடுகளுக்கும் சென்று பூ விற்றுள்ளேன். சில ஆண்டுகள் கழித்து, வீட்டிலேயே டிபன் கடை நடத்தினோம். அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன். அதற்கே பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.பி.ஏ., முடித்த அண்ணன் ஆதிகேசவன், ஆட்டோ ஓட்டித் தான் என்னை படிக்க வைத்து, கல்யாணமும் செய்து வைத்தார். அவர் இல்லை என்றால், என்னால் வழக்கறிஞர் ஆகி இருக்கவே முடியாது.சின்ன வயதிலேயே எனக்கு, வழக்கறிஞர்ஆக வேண்டும் என்ற ஆசை அதிகம் உண்டு.
வழக்கறிஞராகி, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதைத் தான் லட்சியமாக கொண்டு இருந்தேன். எனினும், அது எளிதில் நடந்து விடவில்லை. ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். சட்டக் கல்லுாரியில் மதியம் படிப்பு. அதற்கு முன், காலையில், டிபன் கடையில் வேலை என, வறுமையை விரட்ட போராடினேன்.வழக்கறிஞர் ஆகி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீனியர் வக்கீல் ஒருவர்கிட்ட, ஜூனியராக வேலை செய்தேன்.
பிறகு, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் வாதாடுகிறேன்.என்னை படிக்க வைத்த அண்ணனுக்கும், வழக்கறிஞர் பணி மீது தீராத காதல். அதனால் அவரும், ஆட்டோ ஓட்டியபடி, 42 வயதில், பி.எல்., முடித்தார். இப்போது அவர் என்னிடம், ஜூனியராக வேலையில் உள்ளார்.
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறேன். மாவட்டத்தில் உள்ள பல நீதிமன்றங்களுக்கு சென்று, சட்ட உதவி மையங்களில் பங்கேற்று, ஏழை மக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
இதுமட்டுமின்றி, குழந்தை திருமண தடுப்பு பணிகளையும் மேற்கொள்கிறேன். இதற்காக, டில்லியில் உள்ள தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவால், தமிழகத்தின் சிறந்த ஆணைக்குழு வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டு, விருதும் பெற்றுள்ளேன். என் வளர்ச்சிக்கும், ஏழைகளுக்கு உதவும் மனப்பாங்குக்கும், கணவர் மற்றும் குழந்தைகள் உறுதுணையாக இருக்கின்றனர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE