புதுடில்லி:ஹிந்து மகா சபையின் நிறுவனர், மதன் மோகன் மாளவியா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களது உருவப்படங்களுக்கு, பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
ஹிந்து மகாசபை நிறுவனர் மதன் மோகன் மாளவியா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் பிறந்த நாள், கொண்டாடப்பட்டது.
பரபரப்பு
இதையொட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மத்திய அரங்கில், அவர்களது உருவப் படங்களுக்கு, மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், தலைவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின், 'அடல் பிஹாரி வாஜ்பாய்: நினைவு தொகுதி' என்ற நுாலினை, பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், காங்.,கை சேர்ந்த, ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர், குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து, பிரதமர் புறப்படுவதற்கு முன், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்படி, ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் சஞ்சய் சிங், பக்வந்த் மன் ஆகியோர், அரங்கில் கோஷங்களை எழுப்பியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிந்து மகா சபை
மதன் மோகன் மாளவியா, 1861ல் பிறந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். அதன் பின், ஹிந்து மகாசபையை நிறுவினார். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள, பனாரஸ் ஹிந்து பல்கலையை நிறுவுவதில், முக்கிய பங்காற்றியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின், குவாலியரில், 1924, டிசம்பர், 25ல் பிறந்த வாஜ்பாய், ஜன சங்கம் மற்றும் பா.ஜ., ஆகியவையின் நிறுவன உறுப்பினராக இருந்தவர். பா.ஜ.,வின் முதல் பிரதமரான வாஜ்பாய், மூன்று முறை, அப்பதவியை வகித்துள்ளார்.
ஜெய்சங்கர் புகழாரம்
வாஜ்பாய் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மற்ற நாடுகளுடனான நம் வெளியுறவு ஈடுபாடுகளை விரிவுபடுத்த, பாதை அமைத்து கொடுத்தவர். சீனாவை, பரஸ்பர மரியாதையுடன் நடத்தும் இந்தியாவின் கொள்கை ரீதியான அணுகுமுறையும், வாஜ்பாயின் சிந்தனையை பிரதிபலிக்கிறது.
பொக்ரானில், 1998ல் அணு ஆயுத பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்தது, அவரது ஆட்சி காலத்தின் மிக முக்கிய பங்களிப்பாக பார்க்கப்படுகிறது. நம் நாடு, தனது உறவுகளையும், நலன்களையும் கடுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வும் புரிதலும், அவருக்கு எப்போதும் இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE