வாஷிங்டன்:ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இயங்கும், 'கிளீவ்லேண்ட் கிளினிக்' மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், 10 ஆண்டுகளாக, புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிட்ட சில புற்றுநோய்களுக்கு, அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. ரத்த புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோயை குணப்படுத்த, புதிய மருந்துகளை, அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளுடன், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை வாயிலாக, அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, ஆராய்ச்சி யாளர்கள் குழுவில் அங்கம் வகித்த டாக்டர் மெசிஜெவிஸ்கி கூறியதாவது:ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை எதிர்த்து போராடக்கூடிய, டி.இ.டி.ஐ., 76 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளோம்.
இந்த செயற்கை மூலக்கூறு, உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, செல்களை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது என்பதை கண்டறிந்தோம். இது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துவக்க காலம் முதல், முழுதும் பாதிக்கப்பட்ட காலம் வரை, உடலில் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் உடையது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல், மற்றொரு ஆராய்ச்சியாளரான பாபல் காந்த் ஜா கூறியதாவது:இந்த ஆய்வு முடிவுகள், நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த, டி.இ.டி.ஐ., 76 செயற்கை மூலக்கூறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பரவலை தடுப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் உள்ள உயிரணுக்களின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE