சென்னை:சி.பி.ஐ., வசமிருந்த, 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், விசாரணை அதிகாரியாக, எஸ்.பி., விஜயகுமாரை நியமித்துள்ளனர்.
சென்னை, சவுகார்பேட்டை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் செயல்பட்டு வரும், சுரானா என்ற தனியார் நிறுவனத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள், 2012ல், சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். இவற்றை, அந்நிறுவனத்தின் லாக்கர்களில், சி.பி.ஐ., முத்திரையுடன், 'சீல்' வைத்து பாதுகாத்தனர்.
இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மீறியதாக, சுரானா நிறுவனம் மீது, 2013ல், மேலும் ஒரு வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணைக்காக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற அனுமதியுடன், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட, 400.47 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் ஆவணங்கள் மாற்றப்பட்டன.வழக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2015ல், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், 'குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை' எனக் கூறப்பட்டது.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட, 400.47 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சுரானா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதே நேரத்தில், 'சுரானா நிறுவனம், 1,160 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. 'இதற்காக, சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள, 400.47 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை, எங்கள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும்' என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திலும் முறையிட்டனர்.
விசாரணையில், சுரானா நிறுவனம், ஆறு வங்கிகளில் கடன் பெற்று இருந்தது தெரியவந்தது. இந்த வங்கிகளுக்கு நகைகளை பிரித்துக் கொடுப்பது தொடர்பாக, தீர்ப்பாயத்தால், சிறப்பு அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார்.இவரது தலைமையில், வங்கிகள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னிலையில், சுரானா நிறுவன லாக்கரில் இருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் எடை போடப்பட்டன. அப்போது, 103 கிலோ தங்க கட்டிகள் மாயமாகி இருந்தன. இதன் மதிப்பு, 30 கோடி ரூபாய்.
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ., அதிகாரிகளின் நடவடிக்கைகள் மீது, பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், விசாரணை அதிகாரியாக, எஸ்.பி., நிலையில் இருப்பவரை நியமிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணை அதிகாரியாக, எஸ்.பி., விஜயகுமாரை நியமித்துள்ளனர்.
ஐ.பி.எஸ்.,களுக்கு 'கிடுக்கிப்பிடி'
தங்க கட்டிகள் மற்றும் நகைகள் மாயமானது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது, சி.பி.ஐ., இயக்குனராக ரஞ்சித் சின்கா, தென்மண்டல ஐ.ஜி.,யாக, தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி., அசோக்குமார், டி.ஐ.ஜி.,யாக, ஓய்வு பெற்ற கூடுதல் டி.ஜி.பி., அருணாச்சலம் உள்ளிட்டோர் பணிபுரிந்தனர். இவர்களில், அருணாச்சலத்திடம் விசாரணை நடந்துள்ளது. அடுத்தடுத்து, அசோக்குமார் உள்ளிட்டோரை விசாரிக்க, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE