வரும் சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அத்தொகுதியில் போட்டியிட, மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் விரும்புவதால், உதயநிதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை நகரில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன் இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின், தற்போது, அத்தொகுதி காலியாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அத்தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியினர் விரும்புகின்றனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் ஓட்டுக்கள் நீக்குவது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை, உதயநிதி தரப்பினர் முடுக்கி விட்டுள்ளனர்.
மதன் தலைமையில், சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள், உதயநிதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என, களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், மாவட்ட நிர்வாகி ஒருவர், மறைந்த முன்னாள் அமைச்சர் வாரிசை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை, திரைமறைவில் செய்து வருகிறார்.
அதேபோல, திருவல்லிக்கேணியை சேர்ந்த பகுதி நிர்வாகி ஒருவர், இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என, ஒற்றைக்காலில் நிற்கிறார்.உதயநிதி போட்டியிடுகிறார் என, அத்தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்த பின்னும், மாவட்ட நிர்வாகி, தன் ஆதரவாளரை நிறுத்த முயற்சிப்பதும், பகுதி நிர்வாகி, தாம் போட்டியிட விரும்புவதும், கட்சிக்கு செய்கிற துரோகம் என, குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களுக்கு தொகுதி கிடைக்காத ஏமாற்றத்தால், போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், உதயநிதிக்கு எதிராக, திரைமறைவில் உள்குத்து வேலைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE