சென்னை:சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்வதில், முறைகேடுகள் நடப்பதை தடுக்க, பதிவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், பல்வேறு சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடியாக பத்திரங்கள் பதிவு செய்யப் படுவதாக, புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்க, ஐ.ஜி., சங்கர் உத்தரவிட்டுள்ளார்.அவரது உத்தரவு:
ஆள்மாறாட்ட புகார்கள் மீது, மாவட்ட பதிவாளர்கள் காலதாமதமாகவும், ஒருதலைபட்சமாக நடப்பதாகவும், சார் - பதிவாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இத்தகைய புகார்களை கிடப்பில் போடாமல், எவ்வித பாரபட்சமும் இன்றி, இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, இவர்கள் இருவரின் பங்களிப்பு குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும். துறையில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், பொது மக்களிடம் நம்பிக்கை ஏற்படவும், வெளிப்படை தன்மையுடன், மாவட்ட பதிவாளர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.புகார்கள், விசாரணை விபரங்களை, தலைமை அலுவலகத்துக்கு மாதந்தோறும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE