சென்னை: 'நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களின், ஐ.ஏ.எஸ்., பதவியை பறித்து, வெளியே அனுப்ப வேண்டும்' என்றும், சென்னை உயர் நீதிமன்றம் நெத்தியடி கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி ஆணையராக, பழனி என்பவர் பதவி வகித்தார். 'டெண்டர்' கோராமல், 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொண்டதாக, பழனிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தவிர்த்து, மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.'குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை' என, விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார். ஆனால், மூன்று குற்றச்சாட்டுகள் மீதான முடிவை ஏற்காமல், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தள்ளி வைத்தார்.
மூன்று குற்றச்சாட்டுகள்
துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், பணி ஓய்வு பெற, பழனியை அனுமதித்தனர். 2001 ஜூனில் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி, 'பென்ஷன்' தொகையில் மாதம், 200 ரூபாய் வீதம், ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய, நகராட்சி நிர்வாகத் துறை செயலர், 2005ல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனி மனு தாக்கல் செய்தார். மனுவில், 'நகராட்சி நிர்வாகச் செயலராக இருந்த அதிகாரி மாலதியின் துாண்டுதலால், நான் பாதிக்கப்பட்டுள்ளேன்' என, கூறியுள்ளார்.
மனுவை, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கார்த்திக் ராஜன் ஆஜராகி, ''குற்றச்சாட்டுகளை விசாரித்த அதிகாரி, ஆதாரங்களை பரிசீலித்து, உரிய காரணங்களை தெரிவித்துள்ளார். ஆனால், நகராட்சி நிர்வாகச் செயலர் உரிய காரணங்கள் தெரிவித்து உத்தரவு பிறப்பிக்காமல், அபராதம் விதித்துள்ளார்,'' என்றார்.அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் கே.மகேஷ், ''வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், தன்னிச்சையாக மனுதாரர் செயல்பட்டுள்ளார். சில பணிகளுக்கு, தேவையின்றி அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மேற்கொண்ட அவசர நடவடிக்கை, தேவையானதா, தேவையில்லையா என்பதை முதலில் பார்க்க வேண்டும். குப்பை அகற்ற லாரி ஏற்பாடு செய்தது; தெரு விளக்குகள் பராமரிப்புக்கு சாதனங்கள் வாங்கியது; மோட்டார் பழுது பார்த்தது என, ஏழு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த பணிகள் எல்லாம், அவசரமாக மேற்கொள்ள தேவையில்லை எனக்கூற முடியாது. அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், வேகமாக செயல்பட்டிருப்பதை, குறை காண முடியாது. மேலும், நகராட்சி சட்டத்தில், அதற்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கும் குறைவான பணிகளை தான் மேற்கொண்டுள்ளார்.
கடமை ஆற்றாதது
பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்பவர்கள்; ஆக்கிரமிப்புகளை அகற்றுபவர்கள் என, பொறுப்புள்ள அதிகாரிகளை பாராட்ட வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும். அவர்களை தண்டிக்கக் கூடாது. மாதம், 200 ரூபாய் பிடித்தம் என, தண்டனையின் அளவு குறைவாக இருந்தாலும், மனுதாரர் ஆற்றிய பணிக்கு அர்த்தமில்லாததாகி விடும். அவரது நேர்மை, புகழுக்கு கேள்விக்குறி ஏற்பட்டு விடும்.
நகரமைப்பு சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது இல்லை. விண்ணப்பங்களை பைசல் செய்ய காலவரம்பு நிர்ணயித்து, அவ்வப்போது நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தும், அதை பின்பற்றுவது இல்லை.
நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாத அத்தகைய அதிகாரிகள், கடமை ஆற்றுவதில்லை. அவர்களின் ஐ.ஏ.எஸ்., பதவியை பறித்து, வெளியே அனுப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிப்பது என்பது, கீழ்படியாதது மட்டுமின்றி, நேர்மையுடன் கடமை ஆற்றாதது போலாகும்.
தன் எல்லைக்குள் நின்று, கடமை ஆற்றிய மனுதாரருக்கு, எந்த தண்டனையும் விதிக்கக் கூடாது. விசாரணை அதிகாரியின் முடிவில் இருந்து மாறுபடும் போது, விரிவான, நியாயமான காரணங்களை, துறை செயலர் தெரிவிக்க வேண்டும்.எனவே, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் உத்தரவில் குறுக்கிடுவது தவிர, வேறு வழியில்லை. அந்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE