செங்கல்பட்டு,: ''மத்திய அரசின் வேளாண் சட்டத்தை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கவில்லை,'' என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், நல்லாட்சி தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, செங்கல்பட்டில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தலைமையில் நடந்த விழாவில், பிரதமர் மோடி, காணொலி வாயிலாக, விவசாயிகளிடம் உரையாற்றினார்.
விழாவில், 'விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு' என்ற புத்தகத்தை வெளியிட்டு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
மத்திய அரசின் வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு பயன் உள்ளது. இந்த சட்டத்தை, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கவில்லை. புரிந்து கொள்ளாமல், பஞ்சாப் மாநிலத்தினர் எதிராக, போராட்டம் நடத்துகின்றனர்.காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2004 முதல், 2014 வரை, விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் திட்டத்தை அமல்படுத்தவில்லை.
காங்., ஆட்சியில், விவசாயிகளுக்காக, 53 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு செலுத்தப்பட்டது. மோடி அரசு, 1.20 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக, 80 கோடி மக்களுக்கு, அரிசி, கோதுமை வழங்கி உள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, அவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. இந்த நிலை தற்போது மாறுகிறது. விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்று விற்கலாம். அதிக விலை எங்கு கிடைக்கிறதோ, அங்கு சென்றும் விற்கலாம்.
மத்திய அரசு, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தும். விவசாயிகள் நலனில், பிரதமர் மோடி அக்கறை செலுத்தி வருகிறார். பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு, தலா, 2,000 ரூபாய், அவர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட குறுஞ்செய்தி, அனைவருக்கும் வந்திருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, மதியம், 12:10 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளிடம், காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்; இந்த நிகழ்ச்சி, 1:40 மணிக்கு முடித்ததது. மோடியின் உரையாடலை, விவசாயிகள் ஆர்வத்துடன் கேட்டனர்.
'சட்டசபை தேர்தலில் பா.ஜ., எழுச்சி பெறும்'
சென்னையில், மத்திய அமைச்சர் ஜாவடேகர் நேற்று அளித்த பேட்டி:மாநில அளவிலான தேர்தலில், பீஹார், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம் போன்றவற்றில், பா.ஜ., முன்னேற்றம் அடைந்து, ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது; காங்கிரஸ் வலுவிழந்துள்ளது.அந்த வகையில் நாடு முழுதும், பா.ஜ., வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., எழுச்சி பெறும். தமிழக மக்கள் நலனில், மோடி அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மீதும், மோடி அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
ஐந்து ஆண்டுகளில், விவசாயத்திலும் நல்ல முன்னேற்றம் எற்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்களின் வேளாண் உற்பத்தி பொருட்களை, நினைத்த விலைக்கு விற்று, அதிக லாபம் காண வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.இந்த சட்டத்தால், 2022ல் விவசாயிகள் இரண்டு மடங்கு வருமானம் பெறுவர். பஞ்சாப் தவிர, நாட்டின் மற்ற மாநிலங்களில், வேளாண் சட்டங்களுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. ஆனால், அங்கு மட்டும் விவசாயிகள் தவறாக திசை திருப்பப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE