ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில் அரசு கேபிளை முடக்க முயற்சி| ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில் அரசு கேபிளை முடக்க முயற்சி | Dinamalar

தமிழ்நாடு

ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில் அரசு கேபிளை முடக்க முயற்சி

Added : ஜூலை 01, 2011
Share

அ.தி.மு.க., அரசிடம் தமிழக மக்கள் எதிர்பார்த்த பல விஷயங்களில், கேபிள் "டிவி' தொழிலில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை அடக்க வேண்டுமென்பது மிக முக்கியமானது. இன்னும் ஒரு மாதத்தில் இது நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். ஆனால், அதற்கான செயல் திட்டம் தயாராவதற்கு முன்பே, அதை முடக்குவதற்கான சதி வேலைகள் கன ஜோராக துவங்கி விட்டன. அதில் ஒன்று தான், ஆளும் கட்சியின் பெயரில் கோவையில் துவங்கவிருந்த கேபிள் "டிவி' தொழிற்சங்கம்.கடந்த ஆட்சியின் போது, கருணாநிதி குடும்பத்துக்குள் "கவுரவப்போர்' நடந்த போது, அரசு கேபிள் "டிவி' துவக்கும் முயற்சி நடந்தது. அப்போது, கோவையில் தான் முதல் முறையாக அரசு கேபிள்"டிவி' அலுவலகம் துவக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பின், "கூடி வாழ்ந்தால் "கோ...டி' நன்மை' என்பதை கருணாநிதி குடும்பம் உணர்ந்து ஒன்று கூடிய போது, அதற்கு பூட்டு போடப்பட்டது.அதை மூட வைத்ததில், இங்குள்ள பல கேபிள் ஆபரேட்டர்களுக்கு முக்கிய பங்குண்டு. அவர்களில் சிலர் தான், இப்போது அ.தி.மு.க.,வின் பெயரில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க முயன்றவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். கோவை மாவட்ட அண்ணா கேபிள் "டிவி' ஆபரேட்டர் தொழிலாளர் நலச்சங்கம் (அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைக்கப்பட்டது) என்ற அறிவிப்புடன், அமர்க்களமான விளம்பரங்கள், ஆடம்பரமான அழைப்பிதழ் என, இதற்கான துவக்க விழாவுக்கு கடந்த வாரத்தில் ஏற்பாடு நடந்தது. கடைசி நேரத்தில், என்ன காரணத்தாலோ விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னணியை விசாரித்த போது தான், ஆளும் கட்சியின் பெயரில் தொழிற்சங்கம் துவக்க முயற்சி எடுத்து, அதில் முக்கிய பதவிகளை கைப்பற்றியவர்கள், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர்கள் என்ற விவரம் தெரிய வந்தது. துவக்க விழா நடப்பதற்கு முன்பே, மாவட்ட பொறுப்புகளை சிலர் எடுத்து கொண்டதன் ரகசியமும் அதுதான் என்று தெரிந்தது. இவர்களில், மாவட்டச் செயலராக தன்னை அறிவித்து கொண்ட எம்.ஜி.ராஜா, மாவட்டத் தலைவர் பொறுப்பை எடுத்து கொண்ட மனோகர் போன்றவர்களை பற்றி, ஒரு முழு நீள படத்தையே ஓட்டுவதற்கு கேபிள் ஆபரேட்டர்கள் பலர் தயாராகவுள்ளனர். அதிலும், கேரளாவை பூர்வீகமாக கொண்ட ராஜாவின் அரசியல் பின்னணி குறித்து அவர்கள் சொல்லும் தகவல் அத்தனையும் ஆச்சரிய ரகம். பல ஆண்டுகளுக்கு முன் தீவிர கம்யூனி., ஆக இருந்த ராஜா, அங்கேயிருந்து "அந்தர் பல்டி' அடித்து, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ., அனுமன்சேனா என பல இடங்களுக்கு சென்று, கடைசியாய் தே.மு.தி.க.,வில் அடைக்கலமானார் என்பது முந்தைய தகவல். அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர்களுக்கு அ.தி.மு.க., தொழிற்சங்கத்தில் இவருக்கு மாவட்டச் செயலர் பொறுப்பு எப்படி தரப்பட்டது என்பது இப்போதைய கேள்வி. இதேபோல, முந்தைய ஆட்சியின் போது அரசு கேபிள் "டிவி'க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கருணாநிதியின் குடும்ப கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ராம்குமார், மனோகர், ராஜா உள்ளிட்ட பலருக்கும் இந்த தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்டதன் பின்னணி என்ன என்று கொந்தளிக்கின்றனர் கேபிள் ஆபரேட்டர்கள். இவர்களின் பின்னணி குறித்து ஆராயாமல், தலைமையின் ஒப்புதலின்றி முக்கிய பொறுப்புகளை இவர்களுக்கு வழங்கியதற்கான "காரணம்' என்ன என்று கேள்விக்கணை தொடுக்கின்றனர். ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில், அரசு கேபிள் "டிவி'யை கைப்பற்றி அதை முடக்குவதற்காக கருணாநிதியின் குடும்ப கேபிள் நிறுவனம் இவர்களை அனுப்பியிருக்கலாம் என்ற சிறு கேபிள் ஆபரேட்டர்களின் சந்தேகம், புறக்கணிக்கத்தக்கதில்லை. முந்தைய ஆட்சியின் போது, அரசின் மீது நம்பிக்கை வைத்து அரசு கேபிள் "டிவி'க்கு ஆதரவாக குரல் கொடுத்து, கருணாநிதியின் குடும்ப கேபிள் நிறுவனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோர் பலர். இந்த அரசு, எக்காரணத்துக்காகவும் இந்த விஷயத்தை கிடப்பில் போட்டு விடக்கூடாது என்று கூறும் இவர்கள், அரசு துவக்கும் கேபிள் நிறுவனம், தங்களுக்குத் தொழில் பாதுகாப்பைத் தருவதாகவும், ஏகபோக ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதாகவும் இருக்க வேண்டுமென்கின்றனர். அரசு கேபிள் "டிவி' நிறுவனம் துவக்கப்பட்டால், அதை செயல்படுத்துவது சாதாரண விஷயமில்லை; தனியார் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே இதை வெற்றிகரமாக நடத்த முடியும். அதேநேரத்தில், இத்தொழிலில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தாத வகையில், உரிய சட்டத்தை அரசு வகுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இந்தத் தொழிலை நம்பியுள்ள பல ஆயிரம் சிறு கேபிள் "டிவி' ஆபரேட்டர்களும் பிழைக்க வழி கிடைக்கும் என்பதோடு, மக்கள் எதிர்பார்க்கும் கட்டணத்திலும், தரத்திலும் கேபிள் வசதி கிடைக்கும்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X