சென்னை : ''தமிழில், தொட்டதெல்லாம் பாரம்பரியம் தான்,'' என, அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
'ரசிகா பைன் ஆர்ட்ஸ்' 17வது ஆண்டு, 'ஹைபிரிட்' இசை விழா துவக்க நிகழ்ச்சி, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.கொரோனா காரணமாக, இந்த ஆண்டு, நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு, 'ஹைபிரிட் இசை விழா' நடபெறுகிறது.
இதன் வாயிலாக, முற்றிலும் இலவசமாக, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள், நிகழ்ச்சிகளை ஆன்லைனில் கண்டுகளிக்கலாம்.நேரடி நிகழ்ச்சிகள், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.இசை நிகழ்ச்சிகள் தினசரி மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை நடைபெறும். ஹைபிரிட் இசை விழா நேற்று துவங்கி, டிச., 31ம் தேதி நிறைவடைகிறது.
இதில், பிரபல இசை கலைஞர்கள் நித்யஸ்ரீ, மாண்டலின் ராஜேஷ், அபிஷேக் ரகுராமன், கணேஷ் குமார், மாம்பலம் சகோதரிகள் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.நிகழ்ச்சியில், தவில் வித்வான் உடுமலைப்பேட்டை எம்.அங்குசாமிக்கும், வாய்ப்பாட்டு சியாமளா வெங்கடேஷ்வரனுக்கும், 'ரசிக கலா பாரதி' விருதும், 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:இசை மனிதனை இறைவனிடம் கொண்டு செல்லும் வாகனமாக உள்ளது. இந்தியாவிலேயே, சென்னை ஒரு இசை நகரமாக விளங்குகிறது. இந்த மார்கழியில், 4,800 மேற்பட்ட இசை கச்சேரிகள் நடக்கின்றன. தமிழில், தொட்டதெல்லாம் பாரம்பரியம் தான்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், ரசிகா பைன் ஆர்ட்ஸ் தலைவர் வேதாந்தம்ஜி, செயலர் கிரிஜா சேஷாத்ரி, வி.வி.சுந்தரம், தீபக் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சிகளை www.mediapointevent.com என்ற இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE