கள்ளக்குறிச்சி: மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்திட மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நபர் ஜாமின் முறையில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு பணம் வாங்கி சீரழிவதைத் தவிர்க்கவும், தங்க நகைகளை அடமானம் வைப்பதை நிறுத்தவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.பணம் தேவைப்படும் வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலே போதும். தங்களது ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.தொடர்ந்து வங்கி ஊழியர்கள், கடன் தொகை கேட்பவரின் கடையை ஆய்வு செய்து, இரண்டு நபர்களிடம் ஜாமின் பெற்று, அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கி வருகின்றனர்.
வியாபாரிகள் தாங்கள் பெற்ற கடன் தொகையினை மாத தவணையாக செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 350 நாட்களுக்குள் திரும்பச் செலுத்தினால், மீண்டும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.நிலுவைத் தொகைக்கு மட்டும் 10 சதவீத வட்டித் தொகை வசூலிக்கப்படும். இதேபோன்று மகளிர் தொழில் முனைவோர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. சிபாரிசு, அடமானமின்றி கடன் தொகை கிடைப்பதால் இத்திட்டம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளதால், வியாபாரிகள் தங்களது தொழிலினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவர்களின் முயற்சிக்கு பணம் மிகப்பெரும் தடையாக உள்ளது. வங்கிகளில் கடன் பெற நீண்ட காலமும், நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.சாதிக்கத் துடிப்பவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக இருந்தாலும், கடன் தொகை போதுமானதாக இல்லை. அதிக பட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைப்பதால், சிலர் இதை பயன்படுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.எனவே, மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகையினை அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த சம்மந்தப்பட்ட கூட்டுறவு துறைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE