திருப்பூர்:கண்ணாடி பாட்டில்களை வேலியில் கட்டி, மயில் மற்றும் மான்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் விவசாயிகள் முயற்சி, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அவிநாசி அருகே கணியாம்பூண்டி, புதுப்பாளையம், கோதபாளையம், குறுக்கபாளையம் பகுதியில், மான்கள் நிரந்தரமாக வசிக்கின்றன.கடந்த பல ஆண்டுகளாக, மயில்களும் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. மயில் மற்றும் மான்களால், எவ்வித பயிர் சாகுபடியும் செய்ய முடியாத அளவுக்கு, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பயிர்களை அழித்துவிடுவதால், சாகுபடியில் மகசூல் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், பயந்த சுபாவமுள்ள மான்களிடம் இருந்தும், மயில்களிடம் இருந்து பயிர்களை காக்க, கண்ணாடி பாட்டில்களை கட்டி வைக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்றி வருகின்றனர்.பயிர் வேலியை சுற்றிலும், கயிறு கட்டி, அதில் காலி கண்ணாடி பாட்டில்களை, அருகருகே வரிசையாக கட்டி தொங்க விட்டுள்ளனர். லேசான காற்று வீசினாலும், கண்ணாடி பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும், உரசியும், ஒலியை வெளிப்படுத்துகின்றன. அமைதியான சூழலில், திடீரென கண்ணாடி பாட்டில்களில் இருந்து ஒலி எழுவதால், மான்கள் மிரண்டு ஓடிவிடுகின்றன.விவசாயிகள் கூறுகையில், 'மயில் மற்றும் மான்களால், கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்பை சந்தித்து வருகிறோம். அரசு தரப்பில் எவ்வித உதவியும் இல்லாததால், நாங்களே பாதுகாப்பு வேலி அமைத்து கொண்டோம். குறைந்த செலவில், மான் மற்றும் மயில்களை விரட்ட வசதியாக, கண்ணாடி பாட்டில் வேலி அமைக்கும் முயற்சி கை கொடுத்துள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE