ஓட்டேரி: ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலை பகுதியில், தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, அந்த பகுதியில் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அவர், திருவொற்றியூரைச் சேர்ந்த சந்தோஷ், 23, என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்
மயிலாப்பூர்: மயிலாப்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மசூதி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, ஆட்டோவில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.மந்தைவெளியைச் சேர்ந்த பாஸ்கரன், 45, முருகன், 45, குணசேகரன், 46 ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட, ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. நேற்று மூவரை கைது செய்த போலீசார், 44 ஆயிரம் ரூபாய், இரண்டு மொபைல் போன், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மொபைல் பறித்த இருவர் கைது
அயனாவரம்: கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 36. நேற்று முன்தினம் மாலை, அயனாவரம், ஆண்டர்சன் சாலை வழியாக நடந்து சென்ற போது, ஆட்டோவில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.அயனாவரம் போலீசார், நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன், 18, சூர்யா, 24 ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஆட்டோ, மொபைல் போன் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
ரயிலில் அடிபட்டு இருவர் பலி
தாம்பரம்: அம்பத்துார், ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பசுபதி, 65. நேற்று முன்தினம், சொந்த ஊரான தேனிக்கு சென்று, நேற்று காலை, 5:00 மணியளவில், தாம்பரம் திரும்பினார். தாம்பரம் ரயில் நிலைய ஐந்தாவது நடைமேடையில் இருந்து, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தாம்பரம் அடுத்த பெருங்களத்துார் ரயில் நிலைய கேட் அருகே, விழுப்புரம் மாவட்டம், அகரம் சித்தாமூர், கிணறு தெருவைச் சேர்ந்த செல்வராஜி, 30 என்பவர், நேற்று காலை, 9:00 மணியளவில், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, மின்சார ரயிலில் அடிபட்டு பலியானார். இரு சம்பவங்கள் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் வங்கியில் தீ விபத்து
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில், பிரபல தனியார் வங்கியின் தரைதளத்தில் பழைய பொருட்கள் வைப்பு அறையில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எழும்பூர் தீயணைப்பு படையினர், தீயை அனைத்தனர்.மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.14.62 லட்சம் திருட்டு
மாதவரம்: பெரம்பூரைச் சேர்ந்தவர் கோகுல்குமார், 34; கொளத்துாரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, செங்குன்றத்தில் உள்ள வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது.இவர் கணக்கில் இருந்து, 13ம் தேதி, 14 லட்சத்து, 62 ஆயிரத்து, 988 ரூபாய் எடுக்கப்பட்டது. அது குறித்த குறுஞ்செய்தியை பார்த்து, அதிர்ச்சியடைந்த அவர், மாதவரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து, இழந்த பணத்தை மீட்க, வங்கிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இதில், கோகுல்குமாருக்கு அவரது பணம் திரும்ப கிடைத்தது.
ரவுடிக்கு 'குண்டாஸ்'
வேப்பேரி: சென்னை, மயிலாப்பூர், பட்டு நுால்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு, 27; ரவுடி. இவர் மீது, சமீபத்தில் மணி என்பவரை கொலை செய்தது மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. ஆனந்த்பாபு தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். இவரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE