மதுரை:தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் சேவைகள் சட்டத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை வழக்கறிஞர் லுாயிஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் சேவைகள் சட்டம் 2019 (ஊக்குவிப்பு மற்றும் வசதி) கொண்டு வரப்பட்டது. 2019 அக்.,1ல் அரசிதழில் வெளியானது.
விளை பொருட்கள் உற்பத்தி செய்ய அல்லது கால்நடைகளை வளர்க்க விவசாயிகள், வாங்குவோர் இடையே ஒப்பந்தம் செய்ய சட்டம் வழிவகுக்கிறது. ஒப்பந்தத்தில் இருதரப்பிற்கும் பிரச்னை ஏற்படும்போது மாவட்ட துணை கோட்ட வருவாய்த்துறை அதிகாரி தலைமையிலான சமரச தீர்வுக்குழு மூலம் தீர்வு காணலாம். இதில் ஆட்சேபனை இருப்பின் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
இச்சட்டம் விவசாயிகளின் நலனிற்கு எதிரானது. விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய கடமை, பொறுப்புகளை நிறைவேற்றுவதிலிருந்து அரசு வெளியேறிவிடும். விவசாயிகளின் நலன் கருதி விளைபொருள் கொள்முதல் நிலையங்களை அரசு நடத்துகிறது. விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இத்தகைய பாதுகாப்பிற்கு தமிழக அரசின் புதிய சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்.நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை முற்றிலும் தனியார் துறையிடம் ஒப்படைக்க சட்டம் வழிவகுக்கிறது.
விவசாயத்தில் ஒப்பந்த முறை பணி ஆபத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை நாட முடியாது.தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் சேவைகள்சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு லுாயிஸ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE