உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி ஊர் மந்தையில் கிடந்த தொம்பரை கல்லில் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் மதுரை ரோட்டில் கொங்கபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தின் சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக ஊர்மந்தையில் பழமையான தொம்பரை கல் கிடந்தது.
கல்லில் பழமையான எழுத்துக்கள் இருப்பதைப் பார்த்த கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் மயில்மீனா கொடுத்த தகவலின் பேரில், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், மதுரை தொல்லியல்துறை அலுவலர் ஆசைத்தம்பி, அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். கல்லில் இருந்த எழுத்துக்கள் கி.மு., காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதை உறுதி செய்தனர். கல்வெட்டு எழுத்துக்களை படி எடுத்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் மயில்மீனா
கிராமத்து மந்தையின் முன் இருந்த கருங்கல்லை ரோடு விரிவாக்கம் செய்த போது சீலைக்காரி அம்மன் கோயில் முன்பாக போட்டனர். அதில் எழுத்துகள் இருப்பதை பார்த்து தகவல் தெரிவித்தேன்.
தொல்லியல் து அவர் வந்து கல்மேல் இருந்த மண்ணை அகற்றிப்பார்த்து பழமையான கல்வெட்டுக்கள் என்பதை உறுதி செய்து தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்தார் என்றார்.
தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்
செக்கானூரணி, உசிலம்பட்டி, தேனி மாவட்ட பகுதிகளில் பாறை ஓவியங்கள், கப்மார்க்குகள், தமிழி எழுத்துக்கள், சமணர் படுகைகள் என அதிகம் கிடைத்துள்ளன. தனிக்கல்லில் தமிழி எழுத்துக்களுடன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றார்.
தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி
கல்வெட்டின் காலம் கி.மு., 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம். மதுரையில் இருந்து செல்லும் வணிகப்பாதையின் வழியில் இந்த பகுதியில் வணிகர்கள் தங்கிச் செல்லும் இடமாக முன்னர் இருந்திருக்கலாம். எழுத்துகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன்
எழுத்துக்களில் ஒருவருடைய பெயர், ஊர் பெயர், மற்றும் பொன் ( தங்கம்) குறித்த குறியீடு முதலியவை உள்ளன. கல்லின் முதல் எழுத்து முழுமையான தகவல் இல்லாமல் உள்ளது.
ஆய்வாளர்கள் முறையாக படித்தபின் என்ன எழுதியுள்ளது என்பது தெரியவரும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE