மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, அரங்கநாத பெருமாள் மோகன அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் உலா வந்து, வெளி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஸ்தலத்தார், திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடினர்.
நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சேஷ வாகனத்தில் வலம் வந்து, சொர்க்கவாசல் முன் எழுந்தருளினார். அங்கு புண்ணியாகவாசனம் செய்து, மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் வாசிக்கப்பட்டது.
அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் வெளியே வந்து, கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.காலை, 8:00 மணிக்கு பிறகு, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE