கூடலுார்:'யானை வழித்தடம் நடவடிக்கையால், பாதிக்கப்பட்டோர், தங்கள் தரப்பு ஆட்சேபனைகளை, பிப்., 14ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.முதுமலை சீகூர் பகுதியில், யானை வழித்தடங்களில் உள்ள விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனை, கடந்த அக்., 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதன் தொடர் நடவடிக்கையாக, முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது.இக்கமிட்டி கடந்த மாதம், 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் யானை வழிதடங்களில் ஆய்வு செய்தது. பின்பு, ஊட்டி வனவியல் விரிவாக்க அலுவலக கட்டடத்தில், யானை வழித்தட விசாரணை குழு அலுவலகம் திறக்க பட்டுள்ளது.முதுமலை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''யானை வழிதடம் ஆட்சேபனை குறித்த மனு சமர்பித்தது தொடர்பாக, விசாரணை குழுவின் தலைவர் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் வெளியிட்ட அறிக்கையின்படி, ' யானை வழித்தடம் நடவடிக்கையால், பாதிப்புக்குள்ளானவர்கள், தங்கள் தரப்பு ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். அதன் விபரங்களையும், ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நான்கு நகல்களை, ஆங்கில மொழிபெயர்ப்புடன் இணைத்து, 'அசல் பிரமான பத்திரம்' மற்றும் அதன் மூன்று நகல்கள் அனைத்தும், ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி அலுவலகத்தில். பிப்., 14ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE