தற்காப்புக் கலையை கற்றுக் கொள்வதில், யுவன், யுவதிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆபத்து காலங்களில், தங்களை பாதுகாத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் மறுபக்கம். பல நாடுகளில், ராணுவ வீரர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளது.இந்த கலையில், தமிழக அளவில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, சரவணம்பட்டியில் வசிக்கும் துடியலுார் அருகே, வட்டமலைபாளையம் ராமகிருஷ்ண இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் மாணவர் சரண் பிரசன்னா, 'பயிற்சியும், முயற்சியும் இருந்தால், இக்கலையை சுலபமாக கற்று சாதிக்கலாம்' என்றார்.இக்கலையின் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து, இவர் கூறியதாவது:நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, காந்திபார்க்கில் உள்ள மாரண்ணா கவுண்டர் பள்ளியில், டேக்வாண்டோ தற்காப்பு கலை கற்று தருவதாக கேள்விப்பட்டு, எனது பெற்றோர், என்னை சேர்ந்து விட்டனர். உடல் வலு, துல்லியமான தாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கலையின் பயிற்சி உள்ளது.இதில், எதிரியை, 90 சதவீதம் கால்களால் தாக்குவது எனலாம். எதிரியை இடுப்புக்கு மேலே முகம் வரை தாக்கலாம். ஆனால், முகத்தில் 'பஞ்ச்' செய்யக்கூடாது. இடுப்புக்கு கீழே தாக்கினால், நாம் பெற்ற புள்ளிகள் கழிக்கப்படும். கையில் சிறிய வகை துணி போன்று கட்டிக் கொள்ளலாம். மார்பு தடுப்பு, இப்பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட சிறிய வகை தலைக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். கராத்தே பயிற்சி போல, ஒவ்வொரு வீரரரின் உடல் எடை அளவைக் கொண்டு, டேக்வாண்டோ போட்டியில் ஈடுபடலாம்.கடந்த, 2013ல், 38 கிலோவுக்கு உட்பட்ட எடைப்பிரிவில் பங்கேற்று மாநில அளவில் தங்கம் வென்றேன். தேசிய அளவிலான போட்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் நடந்தது. அதில், ஐந்தாம் இடம் பெற்றேன். இதற்கு பின், எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிகளில் பங்கேற்றேன். இந்தாண்டு, மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடக்கயிருந்த தேசியளவிலான போட்டியில் கலந்து கொள்ள சென்றேன். அங்கு சென்றவுடன், 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டதால், போட்டியில் பங்கேற்ற முடியாமல் திரும்பினேன்.இதுவரை பல்வேறு கிளப்புகள் நடத்திய போட்டிகளில் வென்று, 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று உள்ளேன். போட்டிகளில் பங்கேற்பதால், என் அறிவுத்திறன், தன்னம்பிக்கை ஆகியவை அதிகரித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 97 சதவீதம், பிளஸ், 2 தேர்வில், 85 சதவீத மதிப்பெண், தற்போது இன்ஜினியரிங் கல்லுாரியில் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று வருகிறேன்.தினமும் காலை, மாலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நான் பயிற்சியில் ஈடுபட எனது பெற்றோர் ரங்கராஜ், சங்கீதா ஆகியோர் எனக்கு உதவியாக இருக்கின்றனர். எனது பயிற்சியாளர் சிஜூகுமார் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார். போட்டிகளில் கலந்து கொள்ள ஸ்பான்ஷர்ஷிப் கிடைத்தால் உதவியாக இருக்கும். இவ்வாறு, சரண் பிரசன்னா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE