புதிய கட்டடத்தில், துாண்கள், பீம்கள், தளம், சுவர் ஆகியவற்றுக்கான கட்டுமான பணி முடியும் நிலையில், பூச்சு வேலை மேற்கொள்ளப்படும். இதற்கு சுவரை, கட்டுமானத்தை தயார்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் இப்பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.சுவரின் மேற்பரப்பை பூச்சு வேலைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டும். சுவரில் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை வெட்டி எடுத்து, ஆணிகளையும் அகற்ற வேண்டும். ஜன்னல்கள் அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறு துளைகளை அடைத்து, சீரான மேற்பரப்பை உருவாக்க வேண்டும்.கான்கிரீட் பரப்பாக இருந்தால், அதன் மேற்பரப்பு வழுவழுப்பாக இருக்கும். இதன் மீது பூச்சு வேலை செய்தால் சரியாக ஒட்டாது. சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ பெயர்ந்து விழ வாய்ப்புள்ளது. இத்தகைய இடங்களில் பூச்சு வேலைக்கு முன் மேற்பரப்பை கொத்தி விடுவது நல்லது.பூச்சு வேலைக்கு முன் சுவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்கிறோமோ, அதே போன்று, பூச்சு வேலைக்கு பின்னும் கட்டுமானத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும், கட்டுமான பணியில் சுவர்கள், துாண்கள், தளம் அமைப்பது போன்ற பணிகளின் போது தான் நீராற்றுவதற்காக பொறுமையாக இருக்கிறோம். இதன் பின், வேலைகளை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிப்பதிலேயே பலரும் குறியாக இருக்கின்றனர்.பூச்சு வேலைக்கு முன்னும், பின்னும் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளில் கவனக்குறைவு ஏற்படுகிறது. நல்ல தரமான பொருட்களை பயன்படுத்தி பிரதான கட்டுமானங்கள் சிறப்பாக அமைத்து இருக்கிறோமே, மற்ற விஷயங்களால் என்ன பிரச்னை வந்து விடப்போகிறது என்று, பலரும் நினைக்கின்றனர்.இதன் காரணமாக, பூச்சு வேலைக்கு முன், பின் ஆய்வுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இந்த அலட்சியத்தால், கட்டடத்தில் பல்வேறு குறைபாடுகள், நம் பார்வைக்கு வராமல் போய் விடுகின்றன. பூச்சு வேலையில் சிமென்ட் கலவை சுவருடன் நன்றாக ஒட்டி உள்ளதா என்பதை துல்லியமாக சரிபார்க்க வேண்டும்.வேலை முடிந்து, கலவை காய்ந்த நிலையில், சிறு சுத்தியலை பயன்படுத்தி தட்டி பார்க்க வேண்டும். இதில் ஏற்படும் ஒலி அனைத்து இடங்களில் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இதில் ஏதாவது இடத்தில் மாறுதல்கள் தெரியவந்தால், அங்கு கலவை சரியாக ஒட்டவில்லை என்று அர்த்தம்.உடனடியாக, அந்த பகுதியை உடைத்து, முறையாக கலவையை பயன்படுத்தி பூச்சு வேலையை மேற்கொள்ள வேண்டும். பூச்சு வேலையின் போது, கலவையின் தடிமன், மட்டப்பலகை உதவியுடன் சரிபார்க்கப்படும். ஆனாலும், சில இடங்களில் வேறுபாடுகள் தெரியவரும்.இதுபோன்ற பகுதிகளை சரிபார்த்து, கொத்தனாரிடம் தெரிவிக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் குறைபாடுகள் தெரிகிறதோ, அதை குறித்து வைத்து கொத்தனாரிடம் மட்டுமல்லாது, அவருக்கு மேல் நிலையில் உள்ள கண்காணிப்பு பணியாளரிடம், தேவைப்பட்டால் பொறியாளரிடமும் தெரிவிக்க வேண்டும் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.வேண்டாம் கவனக்குறைவுசுவர் கட்டி முடித்தவுடன் அப்படியே பூச்சு வேலையை ஆரம்பிக்கக் கூடாது. சுவரின் மேற்பரப்பை பூச்சு வேலைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டும். சுவர் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மேற்பூச்சின் களத்தை அதிகரிக்கக் கூடாது. அதுவே விரிசல் ஏற்பட்டு விட காரணமாகிவிடும். கட்டுமான இடுக்குகளில் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் கவனக்குறைவு, வெடிப்புகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுதல், கம்பிகளில் துரு ஏற்படுவதை கவனிக்காமல் விடுதல் போன்ற காரணங்களால், கட்டுமானங்கள் உரிய ஆயுள் காலம் வரை நீடிக்காமல் போய் விடுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE