மேலுார் : ''விவசாயிகளின் நன்மைக்காகவே மத்திய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன,''என, மேலுாரில் நடந்த பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., தேசிய மூத்த தலைவர் வினய் சஹஷ்ரபுதே எம்.பி., பேசினார்.
மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். தமிழக ஏகத்துவ ஜமாஅத் நிறுவனர் இப்ராஹிம்,மாவட்ட தலைவர் சுசீந்திரன், செயலாளர் கண்ணன், துணை தலைவர் தர்மலிங்கம், பிரசார அணி மாநில செயலாளர் ராஜா, வர்த்தக பிரிவு தலைவர் சகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி காணொலி உரை காட்சிபடுத்தப்பட்டது.
இதில் தேசிய மூத்த தலைவர் வினய் சஹஷ்ரபுதே பேசியதாவது: நஷ்டத்தில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற பிரதமர் மோடி நிறைவேற்றிய பயிர் பாதுகாப்பு திட்டத்தால் 18 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். விவசாயிகளை ஊக்குவிக்க ஜன் தன் வங்கி கணக்கு மூலம் இடைத்தரகர் மற்றும் மாநில அரசுகளுக்கு தொடர்பின்றி ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகள் குறிப்பாக தமிழகத்தில் 41 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை உள்ளிட்ட 28 வகையான பொருட்களுக்கு மத்திய அரசு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது. சிறிய விவசாயிகள் உழவன் உற்பத்தி நிறுவனம் மூலம் தங்களுடைய உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய மத்திய அரசு நிதி உதவி செய்கிறது.
மதுரையில் 6 உழவன் உற்பத்தி நிறுவனங்கள் தேங்காயை தற்போது எண்ணெய்யாக மாற்றி விற்கின்றனர். மண்வள சோதனை திட்டத்தின் மூலம் 73 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர், என்றார்.முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்தார். நகர் தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE