மதுரை : தி.மு.க.,விற்கு எதிராக புதிய கட்சி துவங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த ஜன., 3ல் ஆதரவாளர்கள் மதுரை வாருங்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு மீண்டும் கட்சியில் இருந்து அழைப்பு வரும் என தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியும், ஆதரவாளர்களும் காத்திருந்தனர். ஆனால் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி பெயரில் புதிய கட்சி துவங்கி தென் மாவட்டங்களில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க வேண்டும் என உறுதியேற்றுஉள்ளனர். 'தி.மு.க.,வில் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை' என அறிவித்த அழகிரி தனிக்கட்சி துவங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
சென்னையில் தாயார் தயாளுவை சந்தித்த பின் ”ஜன.,3ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன்” என தெரிவித்த மறுநாளே கருணாநிதி ஸ்டைலில் ஆதரவாளர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பும் விடுத்து வேகம் காட்டியுள்ளார்.அந்த கடிதத்தில் 'வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.,3ல் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள துவாரகா பேலசில் தவறாமல் பங்கேற்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வரவேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் கூறுகையில் “ஸ்டாலினுக்கு எதிராக தனிக் கட்சி துவங்க தற்போது அழகிரி வேகம் காட்டியுள்ளார். ஸ்டாலின், உதயநிதியால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், சீனியர் நிர்வாகிகள் பலர் அழகிரியின் தொடர்புக்கு வந்து முக்கிய ஆலோசனை தெரிவித்துள்ளனர். மதுரை தி.மு.க., நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர். நிர்வாகிகள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE