முதல்வர், அவரது உறவினர் வாயிலாக கொள்ளையடித்துள்ளார் என, குற்றம் சாட்டுகிறோம். அதற்கு, பதில் சொல்ல, அவருக்கு தகுதியில்லை. எங்கள் மீது வழக்கு உள்ளதாக கூறும் முதல்வர், நேர்மையான பொது ஊழியராக இருந்தால், தன்னை பற்றிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, 'நான் யோக்கியன் இல்லை; நீ யோக்கியனா...' என, விதண்டாவாதம் செய்யக் கூடாது.
- தி.மு.க., துணை பொதுச் செயலர் அ.ராஜா எம்.பி.,
'குற்றம் சாட்டுவதற்கு பதில், ஆதாரம் இருந்தால் வழக்கு தொடர வேண்டியது தானே... எதற்காக, விதண்டாவாதம் செய்ய வேண்டும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் அ.ராஜா எம்.பி., பேட்டி.
வணிகர் ஓட்டுக்களை ஓசையில்லாமல் ஒருங்கிணைக்கிறோம். 25 லட்சம் வணிகர்கள், 2.50 கோடி வாக்காளர்களை சந்திப்பர். வியாபாரிகள் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும். வணிகர்கள் கை எப்போதும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா
'எல்லாம் சரி, வணிகர்களுக்கு நீங்கள் பாதுகாவலரா அல்லது அவர்களை தவறாக வழிநடத்துபவரா என்ற கேள்வி எழுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு.
கொரோனாவை காரணம் காட்டி, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு முறையை அமல்படுத்தினால், முறைகேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த முறையை நிராகரிக்க வேண்டும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்

'எந்த நல்ல விஷயத்தையும் எதிர்க்கும் முதல் கட்சியாக, உங்கள் கட்சி விளங்குகிறதே எப்படி...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.
கருணாநிதி மீது, எம்.ஜி.ஆர்., புகார் கொடுத்தார். யார் வேண்டுமானாலும் யார் மீதும் ஊழல் புகார் அளிக்கலாம். இறுதியில் தீர்ப்பு வரும் போது தான் தெரியும்.
- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
'அந்த புகார் என்னவானது; அதுபோலத் தான், இப்போதைய புகார்களுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச்சு.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையை வேண்டாம் என, விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். முதல்வர் பழனிசாமி, 10 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பில், தன் சம்பந்திக்கு, எட்டு வழிச்சாலை ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும் என்பதற்காக, விவசாய நிலங்களை அழித்து, திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறார்.
- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி
'நீங்கள் அமைச்சராக இருந்த போதும், நீங்கள் குறிப்பிடும் அந்த சம்பந்தி தான், மாநில அரசில் பல பணிகளை டெண்டர் எடுத்து செய்துள்ளார்....' என்பதை நினைவுகூரும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேச்சு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE