திருச்சி: வைகுண்ட ஏகாதசியான நேற்று, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. அதிகாலை, 4:45 மணிக்கு, ரத்தின அங்கி அலங்காரத்தில் நம்பெருமாள், சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அன்று திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 14ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வைகுண்ட ஏகாதசியான நேற்று, அதிகாலை, 3:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து, பாண்டியன் கொண்டை, கிளி மாலையுடன் ரத்தின அங்கி அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள், 4:45 மணிக்கு, சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்தார். கொரோனா காரணமாக, பரம பத வாசல் திறப்பின் போது, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அறங்காவலர்கள், பட்டாச்சார்யார்கள், கோவில் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் மட்டுமே கோவிலுக்குள் இருந்தனர். இதனால், வழக்கமான கோவிந்தா கோவிந்தா கோஷம் குறைவாகவே இருந்தது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் அருகே, திருமாமணி மண்டபத்தில், ஆழ்வார்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள், காலை, 8:00 மணி முதல், பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட்டனர். அதிலும், மூலவர் சன்னிதி செல்பவர்கள், பரமபத வாசல் செல்பவர்கள் என தனித்தனியே பிரித்து அனுமதித்தனர். பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு, கோவில் முழுதும், 3 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE