தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும், 2,500 ரூபாய் வினியோகிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரார்களுக்கு, 2,500 ரூபாய், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு, தலா, 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி, ஐந்து கிராம் ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், 4 லட்சத்து, 36 ஆயிரத்து, 839 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 2021 ஜன., 4 முதல், 12 வரை, 1,071 ரேஷன் கடைகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இலங்கை தமிழர் முகாம்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நகரபகுதி ரேஷன் கடைகளுக்கு, கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும். பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விபரங்களை குறிப்பிட்டு, டோக்கன்களை இன்று (26) முதல், 30க்குள் வீடு தேடிச்சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE