ஐதராபாத் : நடிகர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அவர் மருத்துவமனையில் இருப்பதை கவலையாக பார்க்கின்றனர். அதேசமயம் அவர் விரைந்து குணமாக வேண்டி பிரார்த்தனையும் செய்கின்றனர். இதனால் அவரது உடல்நிலை குறித்து விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. விரைவில் இப்படத்தை முடிக்க அதிகநேரம் எடுத்து படப்பிடிப்பில் நடித்து கொடுத்து வந்தார். கொரோனா தடுப்பு உள்ளிட்ட தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்தபோதும், படப்பிடிப்பு தளத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் அவரது ரத்த அழுத்தத்தில் நிறைய மாறுபாடு உள்ளது. இதனால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ரத்த அழுத்த பிரச்னையை சரி செய்யும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பலரும் அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க தொடங்கினர். அதேசமயம் மருத்துவ நிர்வாகம் அவர் நலமாக உள்ளார், கொரோனா பிரச்னை இல்லை என்று கூறியது ஆறுதலை தந்தது. இதை பலர் வரவேற்றாலும் அவர் விரைந்து குணமாக வேண்டும் என அரசியல் தலைவர்கள், திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ''ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக தான் இருந்தாலும், நேற்றைய தினத்தை விட குறைவாக உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கவலைப்படுவதற்கு எதுவும் தேவையில்லை. அவருக்கு இன்னும் சில பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அதன் முடிவுகள் இன்று மாலை தான் கிடைக்கும். அதன் பின்னரே அவர் டிஸ்ஜார்ஜ் செய்வது பற்றி முடிவு செய்யப்படும்'' எனக்கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் தனது அரசியல் நிலைப்பாட்டில் சற்று குழப்பமான மனநிலையில் இருந்தார் ரஜினி. அதன்பின் பரவாயில்லை, தமிழக மக்களுக்காக என் உடல்நிலை பற்றி கவலைப்பட போவதில்லை, கண்டிப்பாக அரசியலுக்கு வருகிறேன் என கூறி ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தினார். ரஜினியின் உடல்நிலை தற்போது நலமாக உள்ளது. இருப்பினும் அடுத்தமாதம் கட்சி துவங்கி, வரும் சட்டசபை தேர்தலை ரஜினி எதிர்கொள்ள இருந்த சமயத்தில் இப்படி ஒரு நிகழ்வு அடைந்திருப்பது, அவரது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
இதனால் பலரும், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் கோயில்களில் வழிபாடு செய்வது, பூஜை செய்வது என ஈடுபட்டுள்ளனர். இதனால் சமூகவலைதளமான டுவிட்டரில் ரஜினியின் உடல்நிலையை வைத்து #RajinikanthHealthCondition, #Rajinikanth, #RajinikanthHealth போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE