'எல்லா கட்சிகளும் தான், 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம். எத்தனை இடங்களில் ஜெயிப்பீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் ஹிந்து மக்கள் கட்சி போட்டியிடும்.
'தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடித்தால் தானே, கூட்டம் சேர்ப்பது தவிர்த்து, எதற்கும் உதவாத உங்கள் கட்சியை, தி.மு.க., கழற்றி விடாமல் இருக்கும்; உங்கள் நிலை பரிதாபம் தான்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: ரஜினி, கமலை காட்டிலும் திறமையான நடிகர் சிவாஜி கணேசன், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ரஜினி நல்ல நடிகர், அவரது ரசிகன் நான். நடிப்பது வேறு, அரசியல் வேறு. தமிழகத்தில், ஜெ., கருணாநிதியின் வெற்றிடத்தை, ரஜினி, கமலால் நிரப்ப முடியாது. தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும்
'பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாமல், ஏராளமாக செலவு செய்து வரும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தையே சுருட்டி விடும் என்கின்றனரே நடுநிலையாளர்கள்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி மாநிலச் செயலர் உதயநிதி பேச்சு: எதற்கெடுத்தாலும், அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் தான். கொரோனாவை காரணம் காட்டி ஊழல் செய்தது, எல்லாருக்கும் தெரியும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் செய்துள்ள தமிழக அமைச்சர்களும், ஜெயலலிதா மரணத்தில் சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்படுவர்.
.
'ஹிந்து மதத்தை நிந்தித்தால், ஓட்டுகள் சேரும் என்பது, அவர்களின் கருத்தாக உள்ளது; ஆனால், நிலைமை மாறி வருகிறதே...' என, தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ஹிந்து மதம், ஹிந்து கடவுள் நிந்தை புரியும் ஸ்டாலின் கூட்டத்தை எத்தனை முறை கண்டித்தாலும் திருந்தவில்லை. இம்முறை அவர்களை, தேர்தலில் மக்கள் தண்டிக்கப் போவது உறுதி. அவர்களுக்கு எப்படி பாடம் புகட்ட வேண்டும் என்பது, பா.ஜ.,வினருக்கும் தெரியும்.
'எத்தனை பேர் தான், உங்களிடம் சொத்து கணக்கு கேட்பர்; அந்த அளவுக்கு சேர்த்து விட்டீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி: நான் என் சொத்து கணக்கு தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிட தயார்; கமல்ஹாசன் வெளியிட தயாரா... மனசாட்சிப்படி அவர் தன் ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும்; நாங்களும் சொல்ல தயாராக இருக்கிறோம்.
'அப்போ, அவருக்கு பின் வந்த கருணாநிதி, ஜெ., எல்லாம் ஒன்றும் செய்யவில்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழகத்திற்கு காமராஜரும், கக்கனும் தான் நிறைய செய்துள்ளனர்' என கூறிஉள்ளார். அது தவறு. தமிழகத்திற்கு எம்.ஜி.ஆர்., செய்தது போல, ஒருவரும் செய்திருக்க முடியாது.
'மாஜி போலீஸ் அதிகாரியான உங்களுக்கு தெரிகிறது; துாண்டி விட்டதால் போராடும் விவசாயிகளுக்கு தெரியவில்லையே...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி: இந்தியாவில் உள்ள, 9.04 கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாயை, அவரவர் வங்கி கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். மோடி ஆட்சிக்கு வந்த பின் தான், விவசாயிகளுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின், எந்த விவசாயியும் தற்கொலை செய்யவில்லை.
'யாரையும் தொங்கலில் விடவில்லை. முதல்வர் வேட்பாளர் பின்னர் முடிவு என்பது, நல்ல முடிவு தான்; அதில் உங்களுக்கு என்ன காண்டு...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை: தேர்தல் நேரத்தில் தான், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அப்போ, இ.பி.எஸ்., கதி; அவரை அந்தரத்தில் தொங்க விட்டதே கூட்டணி கட்சி!
'கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடிய, இப்போதும் போராடும் உங்களை, உண்மையில் பாராட்டவே வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் கூட, தினந்தோறும், 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழக அரசின் செயல்பாட்டை, உலக சுகாதார நிறுவனம், மருத்துவ வல்லுனர்கள் குழு மற்றும் பிரதமர் ஆகியோர் பாராட்டி வருகின்றனர். நல்ல இலக்கை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. புதிய வகையான வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.
'உங்கள் கட்சிக்கு, தஞ்சை தவிர்த்து, பிற மாவட்ட கிராமங்களில் ஆட்கள் கிடைக்கவில்லை என்ற கோபமா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தின் பல ஊர்களில், கூட்டுறவு வங்கிகளில், கடன் வழங்குவதாகக் கூறி, சட்டசபை தேர்தலுக்கான, பூத் கமிட்டிகளுக்கு, ஆள் பிடிக்கும் வேலைகளில், ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இது கண்டனத்திற்குரியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE