கூட்டணி கட்சிகளிடம் கெடுபிடி காட்டும் அ.தி.மு.க.,
''கொள்ளை வசூல் அதிகாரிகளுக்கு, சிக்கல் வந்திருக்கு ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''என்னன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பெரிய கட்டுமான திட்டங்களுக்கு, கட்டாயமா சுற்றுச்சூழல் அனுமதி வாங்கணும்... இதுக்கான பணிகளை கவனிக்க, மாநில அளவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இருக்கு ஓய்...
''சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துல ஒரு அதிகாரி, சமீபத்துல லஞ்ச ஒழிப்பு சோதனையில் வசமா சிக்கினார்...
''அவர்கிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தறா... இதுல பெரிய கட்டுமான திட்டங்கள் விஷயத்துல நடந்த வசூல் பற்றி தான்,முதலில் தகவல்கள் வந்துருக்கு ஓய்...
''தொடர் விசாரணையில, கடந்த சில ஆண்டுகளாக, ஏகப்பட்ட கிரானைட் குவாரிகளுக்கு இந்த ஆணையம் அனுமதி வழங்கி இருக்கு... இதுல, பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியது தெரிய வந்திருக்கு... சீக்கிரமே, வசூல் அதிகாரிகளின் முகத்திரை கிழியும்னு, பனகல் மாளிகையில பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அறநிலையத் துறையிடம் இருந்து, கோவில்களை காப்பாத்தணும் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''சரி தான்... எதுக்காக இதைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருச்சி, துறையூர் பெருமாள்மலை ஸ்ரீதேவி, பூதேவி பிரசன்ன வெங்கடாஜலபதி வகையறா கோவிலுக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலம், துறையூர் நகரின் முக்கிய பகுதியில இருக்குது பா...
''ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்குற, இந்த கோவில் நிலத்தில், 72 சென்ட் இடத்தை, மிக குறைந்த மாத வாடகைக்கு விட்டுருக்காங்க பா...
''அதாவது, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை நிர்ணயிக்க வேண்டிய இடத்துல, வெறும், 2,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுருக்காங்க... இதுல, பல லட்சம் ரூபாய், லஞ்சமா கைமாறி இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.அவ்வழியே சென்ற முதியவரிடம், ''அய்யா... உங்க பிள்ளைங்க முத்துராமனும், சுதர்சனும் நல்லா இருக்காங்களா...'' என, அந்தோணிசாமி விசாரிக்க, அவர் தலையை அசைத்தபடி சென்றார்.
''சட்டசபை தேர்தல்ல, 'சீட்' ஒதுக்குறதுல, அ.தி.மு.க., கெடுபிடி காட்டுதாம் வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''அப்படியா... நம்பவே முடியலையே ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தேர்தல்ல, 170 தொகுதிக்கும் குறையாம போட்டியிட, அ.தி.மு.க., தலைமை தீர்மானிச்சிருக்குதாம்... பா.ம.க., தரப்புல, 50 தொகுதிகளும்; அன்புமணிக்கு, துணை முதல்வர் பதவியும் கேட்குறாங்களாம் வே...
''தே.மு.தி.க., தலைமை, 41 தொகுதிகளும்; விஜயகாந்தின் மச்சான் சுதீஷுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியும் கேட்குதாம்...
''அந்த இரண்டு கட்சிகளின் உண்மையான பலம் என்னன்னு, உளவுத்துறை மூலம் தெரிஞ்சு வச்சிருக்குற, அ.தி.மு.க., தலைமை, 'தலா, 20 சீட் ஒதுக்குறோம்... துணை முதல்வர், ராஜ்யசபா, எம்.பி., பத்தியெல்லாம் பேச்சே எடுக்கக் கூடாது'ன்னு, அதிரடியா சொல்லிட்டாம்... இதனால, ரெண்டு கட்சிகளும் அதிர்ச்சியில இருக்கு வே...'' என,
விளக்கினார் அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
முதல்வர் தொகுதி அதிகாரியின் முறைகேடு வசூல்!
''வடமாவட்டங்களை மனசுல வச்சுண்டு தான், கட்சிக்கு துரோகம் செய்யப்டாதுன்னு பேசியிருக்கார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், குப்பண்ணா.
''தி.மு.க., தகவலா வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆமாம்... வட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க., மாவட்டச் செயலர்கள் சிலர், தாங்கள் அமைச்சராக விரும்பி, அ.தி.மு.க.,வினரிடம் ரகசிய, 'டீலிங்' போட்டிருக்கா... அதாவது, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளுக்கு எதிரா, 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்தறதா, சதி திட்டம் தீட்டியிருக்கா ஓய்...
''குறிப்பா, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு எதிரா, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் துரோகம் செய்யற வேலையில ஈடுபட்டிருக்கா...
''ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் ஆகிய நாலு தொகுதிகள்லயும், தங்களது எதிர் கோஷ்டியினரை தோற்கடிச்சுட்டா, அமைச்சர் பதவிக்கு, தங்களுக்கு போட்டியிருக்காதுன்னு காய் நகர்த்தறா ஓய்...
''இந்த தகவலை, 'ஐபேக்' தரப்பு மோப்பம் பிடிச்சு, கட்சி மேலிடத்துக்கு தெரிவிச்சுடுத்து... அதனால தான், மாவட்ட, ஒன்றியச் செயலர்கள் கலந்துரையாடல் கூட்டத்துல, ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து பேசியிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''தி.மு.க., தகவல் என்கிட்டயும் ஒண்ணு இருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்பாடு குறித்து, 'ஐபேக்' நிர்வாகிகள், சமீபத்துல, 'சர்வே' பண்ணியிருக்காங்க பா... குறிப்பா, உள்ளாட்சி தேர்தல்ல, மெஜாரிட்டி கவுன்சிலர்கள் இருந்தும், டி.என். பாளையம் யூனியன் சேர்மன் பதவியை கோட்டை விட்டது...
''அமைச்சர்கள் கருப்பணன், செங்கோட்டையனுடன் இணக்கம் காட்டுறது பற்றி, மாவட்டச் செயலர் நல்லசிவத்திடம் விசாரணை நடத்தியிருக்காங்க பா...
''அதுல, நல்லசிவத்தின் பதில் திருப்தியா இல்லாததால, தி.மு.க., தலைமையின் கவனத்துக்கு, விஷயத்தை எடுத்துட்டு போயிருக்காங்க... இதனால, நல்லசிவத்தின் பதவி பறிக்கப்பட்டு, 'மாஜி' அமைச்சர் ராஜாவுக்கு தரப்படலாம்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''முதல்வர் தொகுதியிலயே இப்படி நடந்தா எப்படிங்க...'' என்ற ஆதங்கத்துடன், கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சி அலுவலகத்துல இருக்கிற ஓர் அதிகாரி, புது கட்டடம் எங்க கட்டினாலும் அங்கே போய், 'அனுமதியில்லாம கட்டடம் கட்டக் கூடாது... அனுமதி வாங்கி கட்டுங்க'ன்னு அறிவுரை சொல்றாருங்க...
''அனுமதி வாங்க, 20 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும்னும் சொல்லிட்டு வந்துடுறாருங்க... அப்புறமா, தன் உதவியாளரை அனுப்பி, பேரம் பேசி, அனுமதி வாங்கினாலும், வாங்காம கட்டினாலும், ஒரு தொகையை கறந்துடறாருங்க...
''தமிழகம் முழுக்க அதிரடி வேட்டை நடத்துற லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப் பார்த்தா நல்லாயிருக்கும்னு, இடைப்பாடி மக்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
பெஞ்சுக்கு வந்த பெரியவரிடம் குப்பண்ணா, ''மணிகண்டன், உம்ம பேரக்குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கேள்...'' எனக் கேட்க, அவரும், ''இயற்கைபிரியன்னு வச்சிருக்கேன்...''
என்றார்.''வித்தியாசமா இருக்கே... நல்லது ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE