பல ஆண்டுகளாக விவசாய சந்தையில், இடைத்தரகர்களால் விவசாயிகள் தொடர்ந்து சுரண்டப்படுவதைக் குறைத்து, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய அரசால், கடந்த செப்டம்பரில், மூன்று புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால், இச்சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனக் கூறி, பல நாட்களுக்கு முன், பஞ்சாபில் துவங்கிய போராட்டம், தற்போது, தலைநகரான டில்லியை முடக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த, பெரும் போராட்டத்திற்குக் கூறப்படும் காரணங்கள் சரியானதா; புதிய வேளாண் சட்டங்களை நீக்கினால், விவசாயிகளின் சந்தைச் சுதந்திரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
காரணங்கள்
விவசாயிகளின் போராட்டத்திற்கு, இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, இச்சட்டங்களால் பல ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள, விவசாயப் பொருட்களுக்கான குறைந்த பட்ச ல், இரண்டாவது கோரிக்கையில் என்ன நியாயம் உள்ளது என்பது தெரியவில்லை. விவசாயிகளின் வருமான உயர்வுக்கு, இடைத்தரகர்கள் தடைக் கல்லாக இருப்பதால், இவர்களின் ஆதிக்கத்தை சந்தையில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நெடுங்காலக் கோரிக்கையை, புதிய வேளாண் சட்டங்கள் கொடுத்துள்ளன. இடைத்தரகர்கள் இல்லாமல், யாருடைய கட்டாயமும் இல்லாமல், யார் அதிக விலை கொடுக்கின்றனரோ அவர்களிடம் விவசாயிகள்,தங்கள் விளைபொருட்களை தற்போது விற்கமுடியும். இதில் என்ன தவறு இருக்கிறது?
ஏ.பி.எம்.சி., எனப்படும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் சுரண்டலையும், ஒழுங்கற்ற விலை நிர்ணயத்தையும் தடுக்க வேண்டும் என்ற, விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளதில் என்ன தவறு இருக்கிறது... 'விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதற்கு, சந்தையில் இடைத்தரகர்களின் ஆதிக்கமே காரணம்' என, பல்வேறு ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களும் உறுதிபடுத்திஉள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாவதற்கான நடைமுறைகளைக் கூறுவதற்காக, மத்திய அரசால், டாக்டர் அசோக் தல்வி தலைமையில், 2017ல் அமைக்கப்பட்ட குழு, 'விவசாய சந்தையில் உள்ள இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்காமல், விவசாயப் பொருட்களுக்கு சரியான விலையை உறுதிப்படுத்துவது மிகவும் சிரமமானது' எனக் கோடிட்டு காட்டியுள்ளது.
'இடைத்தரகர்களின் சுரண்டலால், நுகர்வோர் கொடுக்கும் விலையில், விவசாயிகளுக்குக் கிடைக்கும் பங்கு, 15 - 40 சதவீதம் மட்டுமே' எனக் இக்குழு கூறியுள்ளது. இந்தியாவில் எந்த மூலையிலுள்ள விவசாயிகளிடம் கேட்டாலும், 'முறைகேடில் தொடர்ந்து ஈடுபடும் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்' என்று தான் சொல்வார்கள். இப்படி இருக்கையில், பஞ்சாப் மாநில விவசாயிகளின் கோரிக்கையான, சந்தையிலுள்ள இடைத்தரகர்களின் பங்கைக் குறைக்கக் கூடாது; அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்... இதை மற்ற மாநில விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா?
குறைந்தபட்ச ஆதார விலை
புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும், எம்.எஸ்.பி., எனப்படும், குறைந்தபட்ச ஆதாரவிலை நிறுத்தப்படும் என்ற தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இது எந்த வேளாண் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. சட்டங்களை முற்றிலும் படிக்காமல், யூகங்களின் அடிப்படையில் சில அரசியல் கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காக, துாண்டிவிடும் செயலாகத் தான் இது தெரிகிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் விவசாய செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரைப்படி, 1965ல் துவங்கி, கோதுமை, நெல் உட்பட மொத்தமாக, 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை, ஆண்டு தோறும் அரசு அறிவித்து வருகிறது.
ஆதார விலையின் மூலம் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், இவற்றை நீக்கினால், விவசாயிகளிடம் கொந்தளிப்பு மட்டுமல்லாமல், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது ஆண்ட மற்றும் ஆளும் அரசியல் கட்சிகளுக்கு நன்றாக தெரியும். இப்படி இருக்கும்போது, ஆதார விலையை நீக்க யாராவது முற்படுவரா?பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முக்கியம் என்றாலும், இதன் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில விவசாயிகளும் பயன்பெறவில்லை என, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் கீழ் இயங்கும், என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பால், விவசாயிகளின் நிலையைப் பற்றி அறிவதற்காக, 2013ல், இந்தியா முழுதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது.நெல் பயிரிடும் விவசாயிகளில் வெறும், 31.5 சதவீதம்; கோதுமை பயிரிடும் விவசாயிகளில், 39.2 சதவீதம் மட்டுமே ஆதார விலை ஒன்று இருப்பதைத் தெரிந்து இருக்கின்றனர்.பருப்பு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளில், 10 - 20 சதவீதம் பேர் மட்டுமே இதைப் பற்றி தெரியும் எனக் கூறியுள்ளனர். இதற்கும் மேலாக, வெறும், 6 சதவீத நெல்லும், 19 சதவீத கோதுமை மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை மூலமாக விவசாயிகள் விற்றுள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
ஆனால், ஆதார விலையுடன், அரசால் நடத்தப்படும் கொள்முதல் மூலமாக பயன்பெற்ற மிகப் பெரிய மாநிலம் பஞ்சாப். 1970-களில் துவங்கி, இன்று வரை நெல் மற்றும் கோதுமைப் பயிர்களை ஆதார விலை மூலமாக விற்று, இம்மாநில விவசாயிகள் பெரும் பயன்பெற்றுள்ளனர். உதாரணமாக, 2019--20ல், இந்தியாவில் ஆதார விலை மூலமாக, மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல் பயிரில், 21 சதவீதமும், கோதுமையில், 38 சதவீதமும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மட்டும் கொள்முதல்செய்யப்பட்டிருக்கிறது.
ஒருவேளை, பயிர்களுக்கான ஆதார விலை நீக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படும் முக்கிய மாநிலம் பஞ்சாப் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எனவே தான், புதிய வேளாண் சட்டங்களால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும் என்ற சில அரசியல் கட்சிகளின் விஷப் பிரசாரத்தை நம்பி, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
எதற்காகப் போராடணும்?
ஒரு ஜனநாயக நாட்டில், பெரும்பாலான விவசாயிகளைப் பாதிக்கும் சட்டத்தை, எந்த ஒரு அரசும் கொண்டுவர நினைக்காது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், விலை நிர்ணயத்தில் தில்லுமுல்லு செய்து, விவசாயிகளின் வருமானத்தை சுரண்ட நினைக்கும் இடைத்தரகர்களின் மீது, எளிமையான வழியில் வழக்கு தொடர முடியும் என்ற ஷரத்துகளுடன் கூடிய, இவ்வேளாண் சட்டங்கள் வரலாற்றுச் சிறப்பானதாகும்.
இதுபோன்ற சட்டங்களால் தான் விவசாயிகளின் பேரத்தன்மையை சந்தையில் அதிகரித்து, இடைத்தரகர்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும். எனவே, இச்சட்டங்களை எதிர்ப்பதற்கு பதிலாக, இச்சட்டங்களுக்கு செம்மை சேர்க்கும் விதமாக, மேலும் சில சட்டங்களை இயற்ற அரசிடம் விவசாயிகள் போராட வேண்டும். முதலாவதாக, நெல் மற்றும் கோதுமை தவிர, மற்ற பயிர்களை ஆதார விலையில் விற்க முடியாமல் விவசாயிகள் பல காலமாக தவித்து வருகின்றனர். விவசாயப் பயிர்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்றால் மட்டுமே, அரசால் அறிவிக்கப்படும் ஆதார விலையைப் பெற முடியும்.
எனவே, குறைந்த பட்ச ஆதார விலையில் மட்டுமே, விவசாயப் பொருட்களை விற்பதற்கான உறுதிச் சட்டத்தை இயற்ற, விவசாயிகள் போராட வேண்டும்.இரண்டாவதாக, புதிய வேளாண் சட்டங்கள் இயற்றிய பிறகும், வெங்காயம் போன்ற விவசாயப் பொருட்களுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்படுகிறது; இது, புதிய சட்டத்திற்கு எதிரானது. மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள், இத்தடையை எதிர்த்துப் போராடியது போல், அனைத்து மாநில விவசாயிகளும், இது போன்ற தடையை இனிமேல் விதிக்க கூடாது என, போராட வேண்டும்.
மூன்றாவதாக, தோட்டக் கலைப் பயிர்களுக்கு, குறைந்த பட்ச ஆதார விலை இதுவரையிலும் கிடையாது. இதனால், தக்காளி, உருளை, வெங்காயம் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல், ஒவ்வொரு ஆண்டும், பல சிரமங்களைச்
சந்திக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், ஈரோடின், பாலக்கோடு சந்தையில் தக்காளிக்கு, 1 கிலோ விலை, 1 ரூபாய் மட்டும் என, இடைத்தரகர்கள் நிர்ணயித்ததால், தக்காளியை அங்கேயே கொட்டி மிதித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எனவே, சமீபத்தில் கேரளா அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தோட்டப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலைத் திட்டத்தை, தேசிய அளவில் நடைமுறைப்படுத்த விவசாயிகள் போராட வேண்டும். நான்காவதாக, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் மட்டுமே, குறைந்த பட்ச ஆதார விலையால் பெரும் பயனடைந்துள்ளன.
மற்ற மாநிலங்களுக்கும் இதன் மூலம் பயன் கிடைக்கும் வகையில், மாநிலத்தின் உற்பத்தியோடு தொடர்புடைய கொள்முதல் திட்டங்களை ஏற்படுத்த விவசாயிகள் போராட வேண்டும்.
ஐந்தாவதாக, இந்திய உணவுக் கழகத்தை சீர் அமைப்பதற்காக, சாந்தகுமார் தலைமையில், 2015ல் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, நெல் மற்றும் கோதுமை அல்லாத பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக, மற்ற பயிர்களையும் ஆதார விலையுடன் கூடிய கொள்முதல் செய்யப் போராட்டம் நடத்த வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் எந்தத் தவறும் கிடையாது.ஆனால், சந்தையில் இடைத்தரகர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்கும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை எந்த விவசாயிகளும் ஏற்க கூடாது; உண்மையான விவசாயிகள் ஏற்க மாட்டார்கள்.உண்மையை விவசாயிகள் விரைவில் உணர்ந்து கொள்வர். மேலும், கட்சிகள் துாண்டுதலால் நடத்தப்படும் போராட்டம், விரைவில் பிசுபிசுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை!
பேராசிரியர் அ.நாராயணமூர்த்தி,
முன்னாள் உறுப்பினர்,
விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம்
தொடர்புக்கு:
இ-மெயில்: narayana64@gmail.com
மொபைல்: 94860 82154