போபால்:மத்திய பிரதேசத்தில், கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான புதிய சட்ட மசோதாவுக்கு, மாநில அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, சமீப காலமாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட, பா.ஜ., ஆளும் மாநிலங்களில், அந்த முறைக்கு எதிராக, கடுமையான சட்டங்களை இயற்ற, மாநில முதல்வர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, அந்த நடைமுறைக்கு எதிராக, மத்திய பிரதேசத்தில், ஒரு புதிய சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்தது.அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த புதிய சட்ட மசோதாவுக்கு, அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதாவின்கீழ், வலுக்கட்டாயமாக மத மாற்றும் நபர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல், மைனர் சிறுமி மற்றும் எஸ்.சி., எஸ்.டி., சமூக பெண்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்ச அபராதமாக, 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
அடுத்தபடியாக, இந்த மசோதா, மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது.ஏற்கனவே, நவம்பரில், உத்தர பிரதேசத்தில், கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE