புதுடில்லி:டில்லியில், எம்.பி.,க்களுக்கான அலுவலகங்கள் கட்டுவதற்காக, பழைய இரண்டு கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.
புதிய பார்லிமென்ட் கட்டடம் அடங்கிய, 'மத்திய விஸ்டா' திட்டத்தின் கீழ், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் இடம்பெற உள்ளன. அத்துடன், எம்.பி.,க்களுக்கு புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, தற்போது, ரபி மார்க் மற்றும் சன்சத் மார்க் பகுதியில் உள்ள ஷிரம் சக்தி பவன் மற்றும் போக்குவரத்து பவன் ஆகியவை இடிக்கப்பட உள்ளன. இங்கு, எம்.பி.,க்களுக்கு நவீன அலுவலகங்கள் கட்டப்பட்ட உள்ளன. புதிய பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து, எம்.பி.,க்கள் அலுவலகம் அமையும் கட்டடம், சுரங்கப் பாதை வாயிலாக இணைக்கப்பட உள்ளது.
இதற்கான புதிய வடிவமைப்பு படங்களை, வடிவமைப்பு ஆலோசனை வழங்கும், எச்.சி.பி., நிறுவனம் வெளியிட்டு உள்ளது.பார்லிமென்ட் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், விஸ்டா திட்டம் அமைய உள்ள பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்ட அறிக்கையில், 'பிரதமருக்கான புதிய வீடு கட்டப்படும் வளாகத்தில், தலா, நான்கு மாடிகளுடன் கூடிய, 10 கட்டடங்கள் இடம் பெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 ஏக்கர் நிலத்தில், பிரதமரின் அரசு முறையிலான இல்ல வளாகம் அமைய உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE