பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா வருவதற்கு, அந்த நாட்டு அரசு தடை விதித்தது ஒரு காலம். ஆனால், இப்போது அவரை பாராட்டி, தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கியுள்ளது, அமெரிக்க அரசு; இது பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மிக உயரிய விருதாக, 'லிஜியன் ஆப் மெரிட்' விருது மதிக்கப்படுகிறது. இந்த விருது, வெளிநாடுகளின் தலைவர்களுக்கு, அமெரிக்க அதிபரால் வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளின் உயரிய விருதை பெறுவது, இது முதல் முறையல்ல. மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம் ஆகியவையும், மாலத்தீவு, ரஷ்யா ஆகிய நாடுகளும், பிரதமர் மோடிக்கு, தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளன.
சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கான, பிரதமர் மோடியின் பணிகளை பாராட்டி, இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது அமெரிக்காவின் உயரிய விருதை, மோடி பெற்றுள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற பின், இந்திய - அமெரிக்க உறவு பாதிக்கப்படலாம் என, வெளியுறவு நிபுணர்கள் சிலர் சந்தேகித்தனர். ஏனெனில், குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, அமெரிக்கா வருவதற்கு, அவருக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்தது. குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தை காரணம் காட்டி, இந்த தடையை, அப்போதைய அமெரிக்க அரசு விதித்தது. அதனால், பிரதமராக மோடி பதவியேற்றபின், அவரை அமெரிக்கா எப்படி வரவேற்கும் என, சந்தேகம் ஏற்பட்டது.
ராஜ மரியாதை
ஆனால், பிரதமரானதுமே, அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமாவுடன், மோடி நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தினார். கடந்த, 2014ல் நடந்த, ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக சென்றார். அமெரிக்காவில் ஒரு வாரத்துக்கு மேல் தங்கியிருந்த மோடிக்கு, அங்கு, ராஜமரியாதை அளிக்கப்பட்டது.அமெரிக்க வாழ்இந்தியர்கள், மோடியை பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். நியூயார்க் மேடிசன் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, 2015 குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, ஒபாமாவை பங்கேற்க வைத்தார் மோடி. இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பில் கையெழுத்தான பல ஒப்பந்தங்கள், இந்திய - அமெரிக்க உறவு மேம்பட வழிவகுத்தன.
அதேபோல், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற போதும், வெளியுறவு கொள்கைகள் குறித்து, பலரும் சந்தேகப்பட்டனர். ஏனெனில், மிகப் பெரிய தொழிலதிபரான டிரம்புக்கு, அரசியல் அனுபவம் இல்லை. வெள்ளை மாளிகையின் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாமல், அதனுள் நுழைந்தவர் என்பதால், டிரம்ப் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெளிநாட்டு தலைவர்களை பகிரங்கமாக விமர்சிப்பது, வெளியுறவு கொள்கைகளில் அதிரடி முடிவு எடுப்பது என, டிரம்பின் நடவடிக்கைகள், இந்திய - அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சந்தேகத்தை அதிகரித்தன.
இவற்றையெல்லாம் மீறி, டிரம்புடன் மோடி, நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தினார். ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நட்பு நாடுகளை விட, இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில், டிரம்பும் ஆர்வம் காட்டினார். வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களில், இந்தியாவை விமர்சித்து, டிரம்ப், பல முறை கருத்துக்கள் தெரிவித்து உள்ளார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல், டிரம்புடன், மோடி ஏற்படுத்திய நெருங்கிய நட்பால், இந்தியா - அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெற்றன.
டிரம்ப் கண்டிப்பு
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தாலும்,சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளாலும், இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதையும், டிரம்ப் புரிந்து கொண்டார். மற்ற அமெரிக்க அதிபர்களை விட, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளை, டிரம்ப் பகிரங்கமாக கண்டித்தார். லடாக் எல்லையில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களையும், டிரம்ப் பகிரங்கமாக கண்டித்தார். கடந்த ஆண்டு ஹூஸ்டனில், மோடி - டிரம்ப் இணைந்து பங்கேற்ற கூட்டமும், பிப்ரவரியில், ஆமதாபாதில், டிரம்ப் - மோடி இணைந்த பங்கேற்ற நிகழ்ச்சியும், இரு தரப்பு உறவு, முன் எப்போதும் இல்லாத அளவில் வலுப்பெற்று உள்ளதை, பகிரங்கமாக பறைசாட்டியது. சர்வதேச அளவில், இந்தியா பெரும் சக்தியாக உருவெடுத்து வருவதையும், இந்த நிகழ்ச்சிகள் உறுதி செய்தன. எந்த நாடு, தான் வருவதற்கு தடை விதித்ததோ, அந்த நாட்டின் உயரிய விருதை பெற்று, பிரதமர் மோடி சாதித்துள்ளார்;இது, அவரது ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கூறவேண்டும்.
இது பற்றி வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிரதமரின் தலைமைப் பண்பு, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கை, சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது கொள்கைகள் ஆகியவை அங்கீகரிக்கப் பட்டுள்ளதையே, இந்த விருது காட்டுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE