சென்னை:வாழை மற்றும் மூங்கில் மரக்கன்றுகள், பூச்செடிகள் உற்பத்தி செய்வதற்காக, கிருஷ்ணகிரியில், திசு வளர்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
தோட்டக்கலை துறை பண்ணைகளில் காய்கறி நாற்றுக்கள், பூச்செடிகள், பழமரக்கன்றுகள், முருங்கை, மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
வழக்கமாக, ஒரு மரம் மற்றும் செடியில் இருந்து கிளைகளை எடுத்து, அதிலிருந்து புதிதாக செடிகள் உற்பத்தி செய்யப்படும். இவற்றில் இருந்து, அதிகபட்சமாக புதிய செடிகளை உற்பத்தி செய்ய முடியாது. இவ்வாறு இல்லாமல், ஒரு மரம் அல்லது செடியில் இருந்து, செல்களை ஆய்வகத்தில் பிரித்தெடுத்து, திசு வளர்ப்பு முறையில் ஆயிரக்கணக்கான செடிகளை, ஒரே நேரத்தில் உருவாக்க முடியும். இந்த செடிகள் மற்றும் மரங்கள் வளரும் போது, அவற்றில் அதிகளவில் மகசூல் கிடைக்கும். பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்காது.
ஒரே நேரத்தில், ஒரே எடையில் மகசூல் பெற முடியும். இது, விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை பெற்று தரும். எனவே, திசு வளர்ப்பு முறையில், செடிகள் மற்றும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளில், தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், திசு வளர்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திசு வளர்ப்பு முறையில் பூச்செடிகள், வாழை மரக்கன்றுகள், மூங்கில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதன் வாயிலாக, தளியில் தோட்டக்கலை துறை பயிற்சி மைய டிப்ளமா மாணவர்களுக்கும், செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE