கவுஹாத்தி:''வட கிழக்கு மாநிலங்களில், போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள், ஆயுதங்களை கைவிட்டு, வளர்ச்சியில் இணைந்துள்ளனர். ஆனால், போராட்டம் நடத்துவதற்கு, காங்கிரஸ் தொடர்ந்து துாண்டிவிடுகிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
ஓட்டுப் பதிவு
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன், அடுத்தாண்டு, ஏப்., - மே மாதங்களில், அசாமிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, அசாம் மற்றும் மணிப்பூருக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:வட கிழக்கு மாநிலங்களில், நீண்ட காலமாக, மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த பின், கடந்த ஆறு ஆண்டுகளில், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆயுதம் ஏந்திய இளைஞர்கள், அமைதிப் பாதைக்கு திரும்பியுள்ளனர்.
மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளில் தங்களை இணைத்துள்ளனர். இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளே காரணம். இந்தியா - வங்கதேசம் இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், மணிப்பூரில் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. போடோலாந்தில் சமீபத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது. ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அங்கு, 80 சதவீதம் அளவுக்கு ஓட்டுப் பதிவு நடந்துள்ளது.
ரகசியம்
ஆனால், நீண்ட காலம் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கவே இல்லை. போராட்டங்களில் மக்களை ஈடுபட வைத்து, அரசியல் செய்து வந்தனர்.மிக விரைவில் இங்கு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு அமைதி நிலவுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால், மக்களிடையே போராட்டங்களை துாண்டிவிட்டு வருகின்றனர். இதற்காக பிரிவினைவாத அமைப்பு
களுடன் ரகசியமாக பேசி வருகின்றனர்.அவர்களது முயற்சிகளை முறியடித்து, அமைதியின் பாதையைத் தொடர, மீண்டும், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு தயாராக உள்ளது. டில்லி எல்லையில் போராடும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு, பேச்சு நடத்த முன் வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
'காஷ்மீர் மாறிவிட்டது'
ஜம்மு - காஷ்மீரில், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் நிகழ்ச்சி, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது. டில்லியில் இருந்து, பிரதமர் மோடி பங்கேற்றார். கவுகாத்தியில் இருந்து, அமித் ஷா பங்கேற்றார்.
அப்போது அமித் ஷா பேசியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் அனைத்து சட்டப் பலன்களும், அங்குள்ள மக்களுக்கு கிடைத்து வருகிறது. சமீபத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல், வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, ஆறு ஆண்டு கால ஆட்சி தான், ஜம்மு- காஷ்மீரில், கடந்த, 1990களுக்குப் பிறகு, மிகவும் அமைதியான காலகட்டமாக அமைந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE