வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, துணை முதல்வர் பதவி, பா.ஜ.,வை விட கூடுதல் தொகுதிகள் போன்ற நிபந்தனைகள் தொடர்பாக நடத்திய பேச்சு முழுமை பெறாததால், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
வரும், 31ம் தேதி, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதா; தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து, முடிவு எடுக்கப்படுகிறது.சமீபத்தில், பா.ம.க., மேலிடத்திடம், ஆளுங்கட்சி தரப்பில் கூட்டணி பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, துணை முதல்வர் பதவி தர வேண்டும்.
தயாராக இல்லை
பா.ஜ.,வை விட கூடுதல் தொகுதிகள் தந்து, கூட்டணியில் இரண்டாம் இடம் அளிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள், பா.ம.க., தரப்பில் முன்வைக்கப்பட்டன. பா.ம.க.,வுக்கு, 15 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது பற்றி மட்டும், ஆளுங்கட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால், இரு கட்சிகள் நடத்திய பேச்சில் முடிவு ஏற்படவில்லை. மேலும், பா.ம.க., சொன்ன சில நிபந்தனைகளையும், ஆளுங்கட்சி ஏற்க தயாராக இல்லை.
இதற்கு காரணம், தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு கதவு அடைக்கப்பட்டு விட்டது தான். பா.ம.க.,வை கடுமையாக எதிர்க்கும், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி, சமீபத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, பா.ம.க., விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற நெருக்கடி, அ.தி.மு.க.,வுக்கு இல்லை. அ.தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை, பா.ம.க., பெற வேண்டிய நிலை தான் உருவாகி உள்ளது.
பா.ம.க.,வை விட கூடுதல் தொகுதிகளை,பா.ஜ.,வுக்கு ஒதுக்க, அ.தி.மு.க., மேலிடம் விரும்புகிறது. குறிப்பாக, துணை முதல்வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், பா.ஜ., கேட்கிற தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
மதில் மேல் பூனை
அதேபோல,வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில்,பா.ம.க., கோரிக்கையை நிறைவேற்றினால், இதர சமுதாயங்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்றும்,அ.தி.மு.க., மேலிடம் கருதுகிறது. எனவே, ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், அனைத்து ஜாதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என, அ.தி.மு.க., மேலிடம் எண்ணுகிறது.
அதேபோல, துணை முதல்வர் பதவியையும், மற்ற கட்சிக்கு விட்டுக் கொடுக்க, அ.தி.மு.க., விரும்பவில்லை.இதனால், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறாமல், மதில் மேல் பூனையாக நிற்கிறது. இந்நிலையில், வரும், 31ம் தேதி, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. அதில், அ.தி.மு.க., கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
அதன் பின், கூட்டணி முடிவு எடுக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கவும், அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படவும், அக்கட்சியினர் தீர்மானித்து உள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE