தமிழகத்தில், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஓட்டுச் சாவடிகள் எண்ணிக்கை, 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். இதனால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் தேவையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கையும், கணிசமாக உயரும்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. ஆளும் கட்சியான அ.தி.மு.க., சார்பில், 'ஏப்ரல் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரத்தில், தேர்தலை நடத்த வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தால், பிப்ரவரி இறுதியில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும்.
அதற்கு ஓரிரு மாதங்களே உள்ளதால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி உள்ளது.தற்போது, கொரோனா நோய் தொற்று பரவல் உள்ளதால், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம், தேர்தல் கமிஷனால் அனுப்பப்பட்ட உயர்நிலை குழு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது. இக்குழுவில், பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி இடம் பெற்றிருந்தார்.அவர், கொரோனா நோய் பரவலை தடுக்க, பீஹார் மாநில தேர்தலின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒரு ஓட்டுச்சாவடியில், 1,௦௦௦ வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அதை இரண்டாக பிரிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலின் போது, நகர பகுதிகளில், 26 ஆயிரத்து, 718 ஓட்டுச்சாவடிகள்; ஊரகப் பகுதிகளில், 41 ஆயிரத்து இரண்டு என, மொத்தம், 67 ஆயிரத்து, 720 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவை, 30 ஆயிரத்து, 109 இடங்களில் அமைந்திருந்தன.தற்போது, 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள, ஓட்டுச்சாவடிகளை பிரிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், மொத்த ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 90 ஆயிரத்திற்கு மேல் அதிகரிக்கலாம். அதேபோல, ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்கும் போது, அதே வளாகத்தில், அந்த ஓட்டுச்சாவடியை அமைக்க வேண்டும். அங்கு வசதி இல்லையென்றால், அருகிலேயே அடுத்த ஓட்டுச்சாவடியை அமைக்க வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதனால், ஓட்டுச்சாவடிகள் அமையும் இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடி ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை, கணிசமாக உயரும். ஓட்டு எண்ணிக்கை சுற்றுகள் அதிகரித்து, முடிவு முழுமையாக வெளியாக, காலதாமதம் ஏற்படும். இதுகுறித்து, தேர்தல் அலுவலக ஊழியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும், எவ்வளவு ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்படுகின்றன;
அவை எங்கு அமைக்கப்படுகின்றன; அனைத்து ஓட்டுச்சாவடிகள் அமைவிடம், அவற்றுக்கு செல்லும் வழி குறித்த வரைபடம் ஆகியவற்றை, தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும்; கூடுதலாக எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் தேவை என்ற, விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE