சென்னை :''கிராம சபை கூட்டம் என்ற பெயரை, நாங்கள் பயன்படுத்தக் கூடாதாம்; அப்படி என்றால், இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு போகும் போது, முதல்வர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின், 96வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரை வாழ்த்தி பேசியதாவது:நாட்டில் இருக்கக் கூடிய இன்றைய தலைவர்கள், எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் வழிகாட்டியாக நல்லகண்ணு திகழ்கிறார்.
விரும்பவில்லை
நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சிலர் அறிவித்து, அதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதாக சொல்கின்றனர். அதைப் பற்றி இங்கு பேச, விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக மக்கள், தி.மு.க., தலைமையிலான, மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி, தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கத் தான் போகின்றனர்; அதில், எந்த மாற்றமும் இல்லை.அதற்கான பணிகளை, பிரசாரங்களை, பிரசார வியூகங்களை அமைத்து, தி.மு.க., அணி சார்பில் தொடர்ந்து பயணிக்கிறோம்.
லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்தி, மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக உறுதி தந்தோம். அதை மக்களும் ஏற்று, எங்கள் மீது நம்பிக்கை வைத்து, மிகப்பெரிய வெற்றியை தந்தனர்.இப்போது, மக்கள் கிராம சபை கூட்டம், 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதை பார்த்து, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொறாமைப்படுகின்றனர். அதனால் தான், திடீரென கிராம சபை கூட்டங்களை நடத்தக் கூடாது என, அரசாணை பிறப்பித்துள்ளனர்.
வழிகாட்டி
கிராம சபை கூட்டங்களை, இந்த அரசு ஒழுங்காக நடத்தி இருந்தால், நாம் நடத்த வேண்டிய தேவையே இல்லை. கிராம சபை கூட்டம் என்ற பெயரை, நாங்கள் பயன்படுத்தக் கூடாதாம். அப்படி என்றால், இ.பி.எஸ்., பிரசாரத்திற்கு போகும் போது, முதல்வர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தயாரா? வரும் தேர்தல் என்பது, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. அதற்கு, நல்லகண்ணு நமக்கெல்லாம் வழிகாட்டியாக நிச்சயம் இருக்கப் போகிறார்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை பரிந்துரை செய்வதற்கான குழு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.குழு தலைவரான, முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். கூட்டத்தில், குழு உறுப்பினர் சபாநாயகர் தனபால் பங்கேற்றார். மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கூட்டத்தை புறக்கணித்தார்.
இது தொடர்பாக, பொதுத்துறை முதன்மை செயலர் செந்தில்குமாருக்கு, அவர் அனுப்பிஉள்ள கடிதம்:'மனித உரிமைகள்' என்ற உள்ளார்ந்த அடிப்படை கொள்கை, உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அ.தி.மு.க., ஆட்சிக்கு, அதன் மீது தேவைப்படும் அளவுக்கு நம்பிக்கை இல்லை என்பதை, 10 ஆண்டு கால ஆட்சி வெளிப்படுத்தி இருக்கிறது.மனித உரிமைகள் கண்மூடித்தனமாக மீறப்பட்டுள்ளன. மாநில மனித உரிமைகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளுக்கு, எந்தவித மதிப்பும் அளிக்கப்படவில்லை.
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி, ஓராண்டுக்கு முன் காலியாகி விட்டது. அதை நிரப்பாமல் அமைதி காத்துவிட்டு, ஆட்சி முடிவுக்கு வரப்போகும் கடைசி கட்டத்தில், ஆணைய தலைவர் பதவியை நிரப்ப, தேர்வுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின் மனித உரிமை மீறல்களை கண்டித்து, இக்கூட்டத்தை புறக்கணிக்கிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE