புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி விழாவில் ஹிந்துக்கள் பங்கேற்க முடியாமல் செய்து, ஹிந்து விரோதியாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது;திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி இன்று நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள வருவர். 48 நாட்களுக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கும்.மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, சனிப்பெயர்ச்சி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.ஆனால், சனிப்பெயர்ச்சி விழா நடத்த கூடாது என ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசு வழிகாட்டுதல், ஆகம விதிப்படி விழா கொண்டாடப்படும் என நீதிமன்றத்தில் காரைக்கால் கலெக்டர் பதில் அளித்தார்.
கவர்னர் கிரண்பேடி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்து கொண்டு, விழா நடத்தக் கூடாது என வாதிட்டார். ஒரு மாநிலத்தின் கவர்னர், மாநில அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றது இது தான் முதல் முறை. சனிப்பெயர்ச்சி விழாவுக்கு 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கு முன்பு, கொரோனா சான்றிதழ் அவசியம் என்று கூறியிருந்தால், பலர் அதற்கு தயாராக இருந்திருப்பர். தற்போது சான்றிதழ் வேண்டும் என கேட்கின்றனர்.நீதிமன்றம் தலையிட்டதால், எங்களால் தலையிட முடியவில்லை.
எங்களை பொறுத்தவரை கொரோனா சான்றிதழ் தேவையில்லை. கோவிலிக்குள் பக்தர்கள் அனுமதிப்பதற்கு முன்பு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.சனிப்பெயர்ச்சி விழாவை கவர்னர் தடுக்க காரணம் என்ன. இவர் ஹிந்து விரோதியாக செயல்படுகிறார். சனிப்பெயர்ச்சி விழாவில் ஹிந்துக்கள் பங்கேற்க முடியாமல் செய்து, ஹிந்துக்கள் மனதை புண்படுத்துகிறார். ஹிந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறும் அரசியல் கட்சிகள், தற்போது வாய்மூடி உள்ளது. கவர்னரால் காரைக்காலில் போராட்டம் நடக்கிறது. அங்கு ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு கவர்னரே பொறுப்பேற்க வேண்டும்.ஹிந்து சமுதாயத்தை இழிவுப்படுத்திய கவர்னர் கிரண்பேடி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE