மதுரை : கொரோனா ஊரடங்கு குழந்தைகளின் உடல் எடையை அதிகரித்துள்ளது.உடல் பருமனால் பல்வேறு நோய்கள் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஊரடங்கால் பள்ளி, கல்லுாரிமூடப்பட்டு, குழந்தைகள், இளவயதினரின் வாழ்வியில் முறை அடியோடு மாறிவிட்டது. தினமும் சரியான நேரத்தில் துாங்கி எழுவது, நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது, பள்ளி, படிப்பு, விளையாட்டு என்று இருந்தவர்கள் வீடுகளிலேயே முடங்கிவிட்டனர். 9 மாதங்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. மனநிம்மதியை தொலைத்ததோடு உடல் ஆரோக்கியத்தையும் பறி கொடுத்துவிட்டனர்.
குறிப்பாக, முறையற்ற வாழ்வியல் முறை குழந்தைகளை குண்டாக்கியுள்ளது. உடல் பருமனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளும் இதை உறுதி செய்துள்ளன. குழந்தைகளை பல்வேறு நோய்களுக்கு உடல் பருமன் நோய் அழைத்து செல்லும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ஜோதி கூறியதாவது: கொரோனாவிற்கு பிறகு குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது உண்மை தான். இதற்கு முக்கிய காரணம் 'ஸ்கிரீனிங் டைம்' என்று சொல்லப்படும் ஒளி திரையை பார்க்கும் நேரம் தான். அதாவது முன்பை விட தொலைக்காட்சி, அலைபேசி, கணினியை குழந்தைகள் நீண்ட நேம் பார்க்கின்றனர். இப்படி ஒளிதிரையை ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் தான் குழந்தைகள் பார்க்கலாம் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால் கொரோனா காலத்தில் 6 மணி நேரத்திற்கு மேலாக பார்க்கின்றனர்.பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலேயே இருப்பதால் அதிக உணவுகளை உட்கொள்கின்றனர்.
விளையாட்டு, உடற்பயிற்சி இல்லை. நொறுக்குதீனிகள், ஜங்உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். எனவே தான் உடல் பருமன் பாதிப்பிற்கு குழந்தைகள் ஆளாகியுள்ளனர். இதனால் தாழ்வு மனப்பான்மை மேலோங்கும். மனஅழுத்தம், கவலைகள் அதிகரிக்கும். இளவயதிலேயே சர்க்கரை நோய் வரலாம். அதுவும் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படலாம்.எனவே பருமனை கட்டுப்படுத்துவது அவசியம். இப்போது ஆன்லைன் வகுப்பு அவசியமாகிவிட்டது. இதை தவிர்த்து வேறு எக்காரணங்களுக்காகவும் அலைபேசி, கணினியை குழந்தைகள் பார்க்கக்கூடாது.
வீடியோ கேமை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோரும் இணைவது உற்சாகம் தரும். ஆடியோ பாடல்கள் மூலம் நடனப் பயிற்சி பெறலாம். சத்தான உணவு, காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். கண்டிப்பாக ஜங் உணவுகளை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை இன்னும் அதிகமாக பெற்றோர் கவனிக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE