திருப்பூர் : தி.மு.க.வினர் நடத்திய கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர் தரையில் உட்கார வைக்கப்பட்டது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி - அரசம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது.கூட்டத்துக்கு ஆள் சேர்க்க திண்ணை பிரசார கூட்டம் நல்லிபாளையம் காலனி சிக்கரசம்பாளையத்தில் நேற்று நடந்தது. அதில் கட்சி நிர்வாகிகள் ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர். கூட்டத்துக்கு வந்த படியூர் ஊராட்சி உறுப்பினர் பழனாத்தாள் தரையில் உட்கார்ந்தார். இது குறித்து வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில் 'சமூகநீதி, சமத்துவம், பெண் உரிமை என்று முழங்கும் தி.மு.க.வினர் வார்டு உறுப்பினரை அதுவும் தங்களது கட்சியை சேர்ந்த ஒரு பெண்ணை தரையில் உட்கார வைத்து கூட்டம் நடத்தி உள்ளனர். ஊருக்கு உபதேசம் செய்யும் முன் தி.மு.க. நிர்வாகிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்' என்றனர்.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் அப்புகுட்டி கூறுகையில் ''இடம் நெருக்கடி காரணமாக திட்டில் ஆண்கள் அமர்ந்து கொண்டோம். பெண்கள் ஒன்றாக உட்கார்ந்திருக்கவே பழனாத்தாளும் தரையில் உட்கார்ந்தார். இதில் உள்நோக்கம், பாகுபாடு பார்க்கவில்லை'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE