மியூசிக் அகாடமி, தன், 94ம் ஆண்டிற்கான இசை நிகழ்ச்சிகளை, டிச., 24ல் துவங்கியது. தொடக்க நிகழ்வில், அகாடமி தலைவர் என்.முரளியின் உரை ஒளிபரப்பப்பட்டது. பின், எச்.சி.எல்., நிறுவன தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, காணொலி மூலம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டிச., 31 வரை, இசை நிகழ்ச்சிகள், இல்லங்களில் இருந்து ரசிகர்கள் காணலாம். முதல் இசை நிகழ்ச்சியாக, செம்பனார்கோவில் எஸ்.ஆர்.ஜி.எஸ்.மோகன்தாஸ், நாகஸ்வர இசை வழங்கினார். அகாடமியில், தொன்று தொட்டு, நிகழ்ச்சியை மங்கல இசையுடன் ஆரம்பிக்கும் வழக்கம் உள்ளது. மோகன்தாசுக்கு, மயிலை கே.செல்வம், நாகஸ்வர பக்க பலம் வாசித்தார்.
திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணனும், சுவாமிமலை ஜி.குருநாதனும் தவிலில் அவருடன் இணைந்திருந்தனர். 'ஸ்ரீ கணபதிநி' என்ற தியாகராஜரின் சவுராஷ்ட்ர ராக கிருதியுடன், கச்சேரி துவங்கியது. கிருதியின் பாவத்தை உணரும்படி வாசித்த இந்த நாயனக்கலைஞர், சற்றும் தாமதிக்காமல், தீக் ஷிதரின் சாமாவில் அமைந்த, 'அன்னபூர்னே விசாலாக் ஷி' கீர்த்தனையை அடுத்து வழங்கினார்.இதன் சாஹித்யத்தை, நயமாக வாசித்தலிலேயே ராகத்தின் உருக்கத் தன்மையை, கேட்பவர் உள்ளம் முழுவதிலும் நிறையச் செய்தார்.
கரஹரப்ரியா ராக ஆலாபனை, அடுத்து நமக்களிக்கப்பட்டது. அளித்த பாடல், தியாகராஜரின், 'ராமா நீ சமானமெவரு' என்பதாகும்.இதில், பல்லவியில் சமானமெவரு என்ற இடத்தில் வரும் ஜாரு எனும் நீட்டல், தமிழ் இலக்கணத்தில் வரும் இன்னிசை அளபெடைக்கு இணையானதாக இருக்கும். இதனை, அதன் அளவறிந்து நாதஸ்வரத்தில் பிடித்துக் காட்டினார். இம்மூன்று பாடல்களுக்குமே, கற்பனை ஸ்வரங்கள் இல்லை. பாடல்களில் மூழ்கி விட்டிருந்தார் மோகன்தாஸ் எனக் கொள்வோம்! சதாநந்த தாண்டவம் என்ற பஹுதாரியிலுள்ள அச்சுததாஸரின் பாடலில் தான், கற்பனை ஸ்வரங்களின் பக்கமே திரும்பினார் இவர். பாடலுக்கு முன் வந்த ராக ஆலாபனை, மலைப்பைத் தான் தந்தது!
ராகானுபவத்திற்கு உகந்த கலையம்சம் பொருந்திய நீளக் கார்வைகள், ஒரே ஸ்வரத்தைத் தீர்க்கமாகப் பிடித்தல் போன்ற மகத்தானவை, நம் முன் கிடைத்தது.இந்தப் பாடல் முடிய முடிய, இரு தவில்லைஞர்களும், தனியில் தங்களைப் புகுத்திக் கொண்டனர். ஒருவர் விட்டதை மற்றொருவர் தொடருவது தெரியாமல் வாசிப்பதே, தவில் வாசிப்பவர்களின் பெருஞ்சிறப்பு. அதை, இங்கு கொடுத்து நல்ல விமரிசையாக வாசித்தனர் இருவரும்.துக்கடாவிற்கு வந்து விட்டோம். நெஞ்சை அள்ளிச் செல்லும் பாடல்; அது மிகப் பிரபலமான ஒன்று! டி.எம்.எஸ்.,சின், 'கற்பகவல்லிநின் பொற்பதங்கள்' என்ற பாடலில் அமைந்த ஆனந்தபைரவி, கல்யாணி, பாகேஸ்ரீ ரஞ்சனி ஒவ்வொன்றிலும், மோகன்தாஸ் 'கைநிறைய' கமகங்களை வைத்திருந்து வழங்கி, பாட்டோடும் ஒன்றிப் போய், டி.எம்.எஸ்.,சிடமிருந்து பாடலை தான் பெற்றுக் கொண்டு விடுவாரோ என, ஐயப்படும்படி வாசித்தளித்தார்.-- எஸ் சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE